புதுடெல்லி: ஒன்றிய அரசின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பல்வேறு தன்னாட்சி அமைப்புகள், பொது நிறுவனங்கள், கமிஷன்கள், அமைப்புகள் மற்றும் அமைச்சகங்களின் ஆண்டு அறிக்கைகள், தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை தாக்கல் செய்வதில் ஏற்படும் அதிக காலதாமதத்திற்கான காரணங்களை ஆராய நாடாளுமன்றக் குழு ஒவ்வொரு ஆண்டும் அமைக்கப்படுகிறது. இந்த துறைகள் தங்களின் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள், அறிக்கைகளை நிதியாண்டு முடிந்த ஒன்பது மாதங்களுக்குள், அதாவது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31ம் தேதிக்குள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்நிலையில், தணிக்கை கணக்குகளை தாக்கல் செய்வதில் ஏற்படும் அதிகமான கால தாமதம் தொடர்பாக நேரில் விளக்கம் அளிக்கும்படி, தலைமை கணக்கு தணிக்கை அமைப்புக்கு (சிஏஜி) நாடாளுமன்ற குழு உத்தரவிட்டுள்ளது. பொதுக் கணக்குக்குழு (பிஏசி) அல்லாத ஒரு குழு, சிஏஜி அதிகாரிகளிடம் விசாரணை நடத்துவது இதுவே முதல் முறை’ என்று கூறப்பட்டுள்ளது.