தமிழக அரசு சொத்து வரியை தன்னிச்சையாக உயர்த்திவிட்டு மக்களை சந்திக்க துணிவு இல்லாமல் மத்திய அரசின் மீது பொய்யான புகாரை தெரிவிக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய அரசு நிபந்தனையால்தான் சொத்து வரியை தமிழக அரசு உயர்த்தியுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசு சொல்லவில்லை
மத்திய அரசு வெளியிட்ட ஆணையில் எந்த இடத்திலும் சொத்து வரியை உயர்த்த சொல்லவில்லை. குறைந்தபட்ச நில அளவைக்கு ஏற்ப, குடியிருப்பு, வணிகம், தொழில் சார்ந்த பகுதிகள் என பிரித்து, அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப வித்தியாசங்களுடன் வரி விகிதங்களை பதிவு செய்ய வேண்டும் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுருக்கமாக சொல்லப்போனால், தாங்கள் விதிக்கும் வரி விகிதாச்சாரத்தை பதிவு செய்ய வேண்டும் என்று மட்டும்தான் கூறியுள்ளது.
ஆனால், சொத்து வரியை தன்னிச்சையாக உயர்த்திவிட்டு மக்களை சந்திக்க மனத் துணிவு இல்லாமல், மத்திய அரசின் மீது பொய்யான புகாரை தெரிவித்து, இந்த விஷயத்தை திசை திருப்பமுயற்சிக்கும் தமிழக அரசின் கபட நாடகத்தை பாஜக வன்மையாக கண்டிக்கிறது.
சொத்து வரி உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.