பெங்களூரு:’ஆன்லைன் ஆர்டர்’களுக்கு தபாலில் மாம்பழங்களை அனுப்புவதுடன், மாந்தோட்டங்களுக்கு மக்கள் சுற்றுலா செல்லவும் கர்நாடக மாநில மாம்பழ வளர்ச்சி கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
கர்நாடகாவில், முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு விளையும் பல்வேறு ரக மாம்பழங்களை அனைவரும் விரும்பி ருசிப்பர். நடப்பு ஆண்டுகடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமலில் இருந்தது. இதையடுத்து, மாம்பழ விற்பனைக்கு கர்நாடக மாம்பழ வளர்ச்சி மற்றும் சந்தைப்படுத்தல் கழகம் புதிய வழியை உருவாக்கியது.’ஆன்லைன்’ வாயிலாக மக்கள் ஆர்டர் செய்யும் பழங்கள், வீடுகளுக்கு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டன.
இதன்படி, 2020ல், 35 ஆயிரம் பேருக்கு 1 லட்சம் கிலோ மாம்பழங்களும், கடந்த ஆண்டு, 45 ஆயிரம் பேருக்கு 79 ஆயிரம் கிலோ மாம்பழங்களும் விற்பனை ஆகின. நடப்பு ஆண்டிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒரு நாள் தங்கலாம்இதுகுறித்து மாம்பழ வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனர் நாகராஜு கூறியதாவது:பொதுமக்கள் கர்நாடக அரசின் மாம்பழங்களுக்கான இணையதளம் வாயிலாக தங்களுக்கு பிடித்த ரக மாம்பழங்களை ஆர்டர் செய்தால், அவை தபாலில் வீடு வந்து சேரும்.
இந்த ஆண்டு, மாம்பழ சுற்றுலா திட்டமும் அறிமுகம் ஆகிறது. இதன்படி, பொதுமக்கள் குடும்பத்தினருடன் விவசாயியின் தோட்டத்தில் ஒரு நாள் தங்கலாம்.வேண்டிய மாம்பழங்களை, அவர்களே பறித்துக்கொள்ளலாம். அவர்களுக்கு, விவசாயி வீட்டில் இருந்து ஆரோக்கியமான உணவு வழங்கப்படும். இந்த ஆண்டு, மாமரங்களில் பூக்கள் சற்று தாமதமாக உருவானது. இதனால் பழங்கள் சந்தைக்கு வர தாமதம் ஆகலாம். இருப்பினும், மொத்த மாம்பழ உற்பத்தி, 100 முதல் 120 கோடி கிலோ வரை இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement