சென்னை: தமிழகத்தின் உரிமைகளைக் கேட்டுப்பெறவே டெல்லி சென்றேன் யார் காலிலும் விழுவதற்காக அல்ல என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னையில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தின் தலைவர் பொன் குமாரின் இல்லத் திருமணவிழா இன்று (3.4.2022) நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பொன்குமார் மகன் வினோத்குமார் – ரேவதி ஆகியோரது திருமணத்தை நடத்திவைத்து பேசியதாவது:
நம்முடைய பொன்குமாரின் அருமை மகன் செல்வன் வினோத்குமாருக்கும், சென்னை – வேளச்சேரி பகுதியைச் சார்ந்த டெல்லி பாபு – சுமதி இணையருடைய மகள் செல்வி ரேவதிக்கும் நம்முடைய அன்பான வாழ்த்துக்களோடு இந்த மணவிழா நிகழ்ச்சி நிறைவேறியிருக்கிறது.
இது ஒரு சீர்திருத்தத் திருமணமாக – சுயமரியாதை உணர்வோடு நடைபெற்றிருக்கும் திருமணமாக நடந்தேறியிருக்கிறது. இதுபோன்ற சீர்திருத்தத் திருமணங்கள் – சுயமரியாதைத் திருமணங்கள் 1967-க்கு முன்பு நடைபெறும் என்று சொன்னால் அது சட்டப்படி செல்லுபடி ஆகாது என்ற நிலையில் நடைபெற்றிருக்கிறது. ஆனால் 1967-ஆம் ஆண்டு தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று, அறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்று, ஆட்சியின் தலைவராக – தமிழக முதல்வராக அண்ணா பொறுப்பேற்றுக் கொண்டு, முதல்வராக சட்டப்பேரவைக்குள் நுழைந்து, அவரால் கொண்டுவரப்பட்ட பல்வேறு தீர்மானங்களில் ஒரு தீர்மானம்தான் சீர்திருத்தத் திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லுபடி ஆகும் என்ற அந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்து அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எனவே இன்று நடைபெற்றிருக்கும் இந்தச் சீர்திருத்தத் திருமணம் சட்டப்படி – முறைப்படி செல்லுபடி ஆகும் என்கிற அங்கீகாரத்தோடு நடந்தேறியிருக்கிறது. இது சீர்திருத்தத் திருமணம் மட்டுமல்ல – சுயமரியாதை உணர்வோடு நடைபெறும் திருமணம் மட்டுமல்ல – இது ஒரு தமிழ்த் திருமணம்.
இந்தத் தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஒரு செம்மொழி என்கிற அந்தஸ்தை நமக்குப் பெற்றுத் தந்தவர் நம்முடைய கருணாநிதி என்பதை இந்த நாடு மறந்திட முடியாது. அப்படிப்பட்ட பெருமைக்குரிய நம்முடைய தமிழ்மொழியில் நடைபெற்றிருக்கும் இந்தத் திருமணத்திற்கு தலைமையேற்று, மணவிழாவை நடத்தி வைத்து, அதேநேரத்தில் மணமக்களை வாழ்த்தும் ஒரு சிறப்பான வாய்ப்பினைப் பெற்றமைக்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பை எனக்கு ஏற்படுத்தித் தந்திருக்கும் நம்முடைய பொன்.குமாருக்கு என்னுடைய இதயப்பூர்வமான நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இது திருமணவிழா. இருந்தாலும் பேசிய பலர், பல கோரிக்கைகளை எடுத்துவைத்து, இதற்கு முதல்வர் ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும், அவர் மூலமாக அது நிறைவேற்றப்படும் வேண்டும் என்ற அந்த நம்பிக்கையோடு அந்த கோரிக்கைகளை எடுத்து வைத்திருக்கிறார்கள். இதை நான் சொல்வதற்குக் காரணம், இவனிடத்தில் சொன்னால் அது நியாயமாக இருந்தால் நிச்சயமாக நிறைவேற்றுவான் என்று அந்த நம்பிக்கை இன்றைக்கு உங்களுக்கு மட்டுமல்ல – தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அந்த உணர்வு ஏற்பட்டிருக்கிறது.
அதனால்தான் நாம் நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் – அதைத் தொடர்ந்து நடைபெற்றிருக்கும் சட்டப்பேரவை தேர்தலாக இருந்தாலும் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்கிற இந்த அமைப்பிற்கு மக்கள் ஆதரவு தந்து நம்மைத் தேர்ந்தெடுத்தார்கள். ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு நடைபெற்றிருக்கும் உள்ளாட்சி அமைப்பின் தேர்தல் – நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பின் தேர்தல்களிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறோம் என்று சொன்னால் மக்கள் நம்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இதெல்லாம் ஒரு எடுத்துக்காட்டு. எனவே அந்த உணர்வோடுதான் இந்த மேடையில் வாழ்த்தி உரையாற்றிய நம்முடைய அன்பிற்கினிய சகோதரர் தொல்.திருமாவளவன், மதிப்பிற்குரிய பீட்டர் அல்போன்ஸ், வேல்முருகன் உள்ளிட்ட மற்றவர்களும் இங்கே பேசுகிறபோது இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் சில சூழ்நிலைகளை எல்லாம் சுட்டிக்காட்டி அவை எல்லாம் நீங்கள்தான் நிறைவேற்ற வேண்டும் என்று என்னைப் பார்த்து எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள்.
நிச்சயமாக – உறுதியாக கருணாநிதி வழியில் நின்று, அவர் என்னென்ன சாதிக்க வேண்டும் என்று நினைத்தாரோ – எதை எதை சாதித்துக் காட்டியிருக்கிறாரோ அதையெல்லாம் அவர் வழி நின்று நானும் சாதிப்பேன் என்ற அந்த நம்பிக்கையை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நம்முடைய பொன்குமாரைப் பற்றி எல்லோரும் சிறப்பாகப் பேசினார்கள். ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால், கருணாநிதியைப் பொறுத்தவரையில், பொன்குமாரை ‘பொன்குமார்’ என்று அழைப்பதைவிட ‘என் குமார்’ என்றுதான் அழைத்துக் கொண்டிருக்கிறேன் என்று பெருமையாக சொல்வார். அந்த அளவிற்கு தலைவரிடத்தில் ஒரு சிறப்புக்குரிய இடத்தை பெற்றவராக நம்முடைய பொன்குமார் விளங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
தொடக்கத்தில் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று எண்ணியது கிடையாது. அவர் ஒரு கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தொழிலாளர்களுக்காக – அவர் படும் இன்னல்களுக்காக – துன்பங்களுக்காக நாம் அவர்களுக்கு துணை நின்று பணியாற்ற வேண்டும், அவர்கள் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தோடு அவர் தொழிலாளர்களுக்காகப் போராடுகிற பணியில் முதற்கட்டமாக ஈடுபட்டார். அதற்குப்பிறகு, தொடர்ந்து அவர்களுக்காக குரல் கொடுத்தார். பல்வேறு நாடுகளுக்கெல்லாம் சென்று அங்கெல்லாம் தொழிலாளர்களின் நிலை எவ்வாறு இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதற்கு என்னென்ன பணிகளை ஆற்றிட வேண்டும் என்று முடிவு செய்து, அதற்காகவே குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்.
அவருக்குச் சென்றமுறை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அவர் நம்முடைய மதச்சார்பற்ற கூட்டணியில் இடம் பெற்றிருந்தாலும் அவருக்குச் சட்டப்பேரவை உறுப்பினராக நிற்க வேண்டும் என்று என்னிடத்தில் எடுத்துக் கேட்டபோது, நான் சொன்னேன், “இவ்வளவு கட்சிகள் இருக்கிறது – இவர்களுக்கெல்லாம் இடம் கொடுக்க வேண்டியிருக்கிறது, இந்த முறை எவ்வாறு தலைவர் கருணாநிதி இருந்து இடம் ஒதுக்கித் தந்தாரோ, அதுபோல் வாய்ப்பு இருக்காது என்று நான் கருதுகிறேன். அதற்காக தயவுசெய்து வருத்தப்படாதீர்கள். நிச்சயம் உங்களுக்குரிய மரியாதையை – உங்களுடைய உணர்வுகளை – உங்களுடைய எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் நீங்கள் இருந்து பணியாற்றும் சூழலை நிச்சயம் நான் உருவாக்கித் தருவேன்” என்று நான் சொன்னேன்.
அதனால்தான் ஆட்சிக்கு வந்தவுடன் முதன்முதலாக ஒரு வாரியத்திற்குத் தலைவராக நியமித்தது யார் என்று கேட்டால் நம்முடைய பொன்குமார்தான் நியமிக்கப்பட்டார். அவர் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு இப்போது அல்ல, கருணாநிதியுடைய ஆட்சிக் காலத்தில் கூட அவர் அந்தப் பொறுப்பை ஏற்று பணியாற்றியிருக்கிறார். அப்போது நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக – துணை முதலமைச்சராக இருந்தபோது பல முறை என்னை அவர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அங்கிருக்கும் பல நிகழ்ச்சிகளில் என்னைப் பங்கேற்க வைத்திருக்கிறார். அதையெல்லாம் மனதில் வைத்துதான் நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் அவரை வாரியத் தலைவராக நியமித்து, இன்றைக்கு அந்த வாரியத்திற்கு அவர் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார் – தொழிலாளர்களுக்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார்.
எனவே, இதைப் பொன்குமார் அவர்கள் இல்லத்தில் நடைபெறும் திருமணமாக மட்டும் நான் கருதவில்லை. ஒட்டுமொத்த தொழிலாளர்களின் இல்லத்தில் நடைபெறும் திருமணமாகத்தான் நான் கருதுகிறேன். அந்த உணர்வோடுதான் நானும் கலந்து கொண்டிருக்கிறேன். எனவே
இன்றைக்கு இல்லறத்தில் அடி எடுத்து வைத்திருக்கும் நம்முடைய மணமக்கள் வினோத்குமார் – ரேவதி இவர்கள் என்றைக்கும் இணைபிரியாத நிலையில் ஒரு சிறப்பான வாழ்க்கை அமைத்துக் கொண்டு, பொன்குமார் அவர்கள் எந்த சமுதாயத்திற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறாரோ, அந்த சமுதாயம் முன்னேற்றம் அடையும் வகையில் உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு நீங்கள் வாழ வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். எனவே புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச்சொல்லி இருக்கும், ”வீட்டிற்கு விளக்காய் – நாட்டிற்குத் தொண்டர்களாய்” இருந்து உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
இங்கு சிலர் பேசுகிறபோது குறிப்பிட்டுச் சொன்னார்கள். நான் அண்மையில் துபாய்க்கு சென்றிருந்த நேரத்தில், ஏதோ பல கோடி ரூபாயை எடுத்துக்கொண்டு சென்றதாக முன்னாள் முதல்வர் – இன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி பேசிய செய்திகளையெல்லாம் நாம் பார்த்தோம். அதற்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இங்கே எனக்கு முன்னால் பேசியவர்களே அதற்குரிய விளக்கத்தைத் தந்திருக்கிறார்கள். அதையடுத்து அண்மையில் மூன்று நாட்கள் இந்தியாவின் தலைநகரமான டெல்லிக்குப் பயணம் சென்று, நம்முடைய மாநிலத்தின் பிரச்சினைகளை எல்லாம் பிரதமர் இடத்தில் – அதற்குரிய அமைச்சர்களிடத்தில் அந்தக் கோரிக்கைகளை எல்லாம் எடுத்துவைத்து உரிமைக்குக் குரல் கொடுத்து வந்திருக்கிறோம். அதையெல்லாம் மூடி மறைக்க – அதைத் தாங்கிக்கொள்ள முடியாத சிலர் என்ன சொன்னார்கள் என்றால், ஏதோ அச்சத்தின் காரணமாக – பயத்தின் காரணமாக சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கிற என்னை அதிலிருந்து என்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் போனேன் என்று சொல்கிறார்கள்.
ஒன்று மட்டும் உறுதியாக சொல்கிறேன். அங்கு சென்று யாருடைய காலிலும் விழுந்து, இதை எனக்கு செய்து தாருங்கள் என்று கேட்கவில்லை. தமிழ்நாட்டின் உரிமைக்காகத்தான் நான் போனேனே தவிர, வேறு அல்ல. ஏனென்றால் நான் சாதாரண ஸ்டாலின் அல்ல – பதவியேற்றபோதே நான் சொன்னேன் ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ என்றுதான் சொல்லியிருக்கிறேன். நான் கருணாநிதியின் மகன். என்றைக்கும் தமிழ்நாட்டுக்காக உழைப்பேன். அவ்வாறு உழைக்கின்ற அந்த உழைப்பிற்கு பொன்குமாரும் எனக்குத் துணை நிற்பார் என்று சொல்லி விடைபெறுகிறேன்.” இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.