தமிழகத்தில் இனி தடுப்பூசி கட்டாயம் அல்ல: சுகாதாரத் துறை அறிவிப்பு

Tamilnadu Govt gives relaxation in Corona norms: தமிழகத்தில் இனி முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்றும், தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயமில்லை என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமணம், இறப்பு உள்ளிட்ட நிகழ்வுகள் உட்பட பல்வேறு செயல்பாடுகளுக்கு தமிழக அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது. இந்த கட்டுப்பாடுகள் மார்ச் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் மாநிலத்தில் உள்ள 92% மக்களுக்கும், 2வது டோஸ் 75% மக்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்ததையடுத்து, தமிழக பொது சுகாதார துறை சட்டத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை திரும்ப பெற்று சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அதில், கொரோனா தொடர்பாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அவசியமில்லை. தடுப்பூசி, முகக்கவசம், தனிமனித இடைவெளி ஆகியவை சுய விருப்பத்தின் அடிப்படையில் பின்பற்ற வேண்டும். தமிழகத்தில் சுய விருப்பத்தின் அடிப்படையில் கொரோனா தடுப்பூசிகளை மக்கள் செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: ‘அலைபேசியில் அழைத்து அக்கறையுடன் விசாரித்த ஐயா ஸ்டாலின்…’ நெகிழ்ந்து போன சீமான்

மேலும், திருமணம், இறப்பு நிகழ்வுகளில் பங்கேற்பதற்கான கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் முக கவசம், தனிநபர் இடைவெளி, கைகால் கழுவி தூய்மை பேணுதல், தேவையற்ற முறையில் கூட்டம் சேர்வதை தவிர்த்தல் போன்ற நடைமுறைகளை மக்கள் தொடர்ந்து பின்பற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும், பூஸ்டர் டோஸ்க்கு தகுதியானவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.