சென்னை:
நாட்டில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ள நிலையில், கடந்த 31ம் தேதியுடன் கொரோனா நெறிமுறைகளும் கட்டுப்பாடுகளும் முடிவுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இது சம்பந்தமான முடிவுகளை அந்தந்த மாநிலங்களே எடுத்துக்கொள்ளலாம் என்ற அறிப்பையும் வெளியிட்டிருந்தது.
இதையடுத்து பாதிப்பு மிகவும் குறைவாக இருந்த மாநிலங்கள், கொரோனா கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்தன. மாஸ்க், சானிடைசர் போன்ற அடிப்படை விஷயங்களை மக்களே பின்பற்றிக்கொள்ளலாம் என்ற அறிவிப்பும் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், தமிழகத்திலும் கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்படுவதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. பொது சுகாதாரத்துறை சட்டத்தின் படி கொரோனா கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
‘தமிழ்நாடு முழுவதும் முதல் தவணை தடுப்பூசியை 92 சதவீதம் பேரும், 2ம் தவணை தடுப்பூசியை 75 சதவீதம் பேரும் செலுத்தியிருக்கிறார்கள். மேலும், தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து விட்டது. இதன் காரணமாக கொரோனா காலத்தில் பொது சுகாதாரத்துறை சட்டத்தின்கீழ் விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் திரும்ப பெறப்படுகின்றன.
முக கவசம் அணிதல், தனி மனித இடைவெளி ஆகியவற்றை பொதுமக்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் பின்பற்றவேண்டும். இது தொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகள், மாவட்ட நிர்வாகங்கள் விழிப்பணர்வை ஏற்படுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்தாதவர்கள் இனி தாமாக முன்வந்து, சுய விருப்பத்தின்பேரில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வரவேண்டும்’ என சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தமிழக அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டியது கட்டாயம் இல்லை. கொரோனா தடுப்பூசி செலுத்துவதும் கட்டாயமல்ல. சுய விருப்பத்தின் அடிப்படையில் கொரோனா தடுப்பூசிகளை மக்கள் செலுத்திக் கொள்ளலாம்.