தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்புசென்னையில் உள்ள பாஜக மாநிலதலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம்பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன், அண்ணாமலைக்கு கொலைமிரட்டல் விடுத்த நெல்லையைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப் பட்டார்.
தமிழகத்தில் திமுகவை அண்ணாமலை கடுமையாக விமர்சித்துவருகிறார். இதனால், அண்ணாமலைக்கு இருக்கக் கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தலை மத்திய நுண்ணறிவு பிரிவினர் ஏற்கெனவே மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பி உள்ளனர். அதைத் தொடர்ந்து அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கெனவே, அண்ணாமலைக்கு மாநில அரசால் வழங்கப்பட்ட ‘ஒய் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பு, சில மாதத்துக்கு முன் ‘எக்ஸ்’பிரிவு பாதுகாப்பாகக் குறைக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.
‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு என்பது இந்தியாவில் 4-வது இடத்தில் இருக்கக் கூடிய பாதுகாப்பு பிரிவாகும். ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பில் இருப்பவர்களுக்கு சிஆர்பிஎஃப் பாதுகாப்பு அளிக்கப்படும். தற்போது அண்ணாமலைக்கு 11 சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்பு வழங்குவார்கள்.