தூத்துக்குடி மாநகராட்சியின் நான்கு மண்டலக் குழுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர்களில், தலைமையால் அறிவிக்கப்பட்டவர்களே வடக்கு, கிழக்கு மண்டலத் தலைவர்களாகப் போட்டியின்றித் தேர்வுசெய்யப்பட்டார்கள். அமைச்சர் கீதாஜீவனின் ‘திடீர்’ முடிவால் மேற்கு மண்டலத் தலைவராக அறிவிக்கப்பட்ட கனகராஜ், இரவோடு இரவாக மாற்றப்பட்டு அன்னலெட்சுமி அறிவிக்கப்பட்டு அவர் தேர்வும் செய்யப்பட்டார். தெற்கு மண்டலத் தலைவராக அறிவிக்கப்பட்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளரான சுயம்புக்கு எதிராக, தன் ஆதரவாளரான பாலகுருசாமியைப் போட்டி வேட்பாளராக நிறுத்தி வெற்றிபெறச் செய்தார்.
இதுகுறித்துப் பேசும் உள்ளூர் உடன்பிறப்புகள், ‘‘தூத்துக்குடி மாநகராட்சியில மொத்தமுள்ள 60 வார்டுகள்ல 52 வார்டுகள் கீதாஜீவனோட (தூத்துக்குடி வடக்கு மாவட்டம்) பகுதியிலயும், 8 வார்டுகள் அனிதா ராதாகிருஷ்ணனோட (தெற்கு மாவட்டம்) பகுதியிலயும் வருது. அனிதாவின் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில இருக்குற முன்னாள் கவுன்சிலர்கள்ல ரெண்டு பேர் கீதா ஜீவனோட ஆதரவாளர்கள். அவங்களுக்கு சீட் தரச்சொல்லி கீதா ஜீவன் கேட்க, ‘எனக்கு இருக்குறதே எட்டு சீட்டுதான். அதுல ரெண்டை உங்களுக்குக் கேட்டா எப்படி?’ என்று மறுத்துட்டார். அந்த ரெண்டு பேரையும் சுயேச்சையாக நிறுத்தி கீதாஜீவன் ஜெயிக்க வெச்சுட்டார். அதுலேயே அனிதாவுக்குத் தோல்வி. இப்போ தெற்கு மண்டலத் தலைவர் தேர்தல்லயும் அவருக்குத் தோல்விதான். எதையும் சாதாரணமா கடந்துபோற அண்ணாச்சியால, இதை சாதாரணமா கடந்துபோக முடியல’’ என்கிறார்கள் உடன்பிறப்புகள்!
கரூர் மாவட்டத்திலுள்ள புலியூர் பேருராட்சித் தலைவர் பதவி, தி.மு.க கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தி.மு.க வேட்பாளரான புவனேஸ்வரி போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தார். கட்சித் தலைவர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில், பதவியை அவர் ராஜினாமா செய்ய, மார்ச் 26-ல் மறைமுகத் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. அந்தத் தேர்தலில் தி.மு.க உறுப்பினர்கள் கலந்துகொள்ளாததால், ஒத்திவைக்கப்பட்டது. இந்த விவகாரத்துக்குப் பின்னே ‘ஷாக்’ அமைச்சரின் பெயர் அடிபடுகிறது. ‘‘கூட்டணிக் கட்சிக்குப் புலியூர் பேரூராட்சித் தலைவர் பதவியை ஒதுக்க ‘ஷாக்’ அமைச்சர் விரும்பவில்லை. செட்டிநாடு சிமென்ட் ஆலை உள்ளிட்ட தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நிறைந்த பகுதி புலியூர். அதனால், புலியூரை இழக்க விரும்பாமல், அவர் இப்படி தி.மு.க கவுன்சிலர்களைப் பின்னின்று இயக்குகிறார்’’ என்று புலம்புகிறார்கள் காம்ரேட்டுகள்!
முதல்வரின் துபாய் பயணத்தில், லூலூ நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.3,500 கோடி முதலீடு செய்யவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில், கோவையில் தன் முதல் ஹைபர் மார்க்கெட்டைத் தொடங்கவுள்ள லூலூ, 2024-ல் சென்னையில் புதிய ஷாப்பிங் மாலைக் கொண்டுவரவும் திட்டமிட்டிருக்கிறது. இதற்காக சென்னை கோயம்பேட்டுக்கு அருகே தனியார் கட்டுமான நிறுவனத்தின் உதவியுடன் இடம் தேர்வுசெய்திருக்கிறார்கள்.
அதையடுத்து, தற்போது ஈ.சி.ஆர் சாலையில் இரண்டாவது மால் அமைப்பதற்காக இடம் தேடிவருகிறார்களாம். இந்த இடங்களை ஷாப்பிங் ஏரியா மாஜி மக்கள் பிரதிநிதிதான் மாப்பிள்ளைக்கு உடனிருந்து முடித்துக்கொடுக்கிறார் என்கிறார்கள்.
வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில், மார்ச் 30-ம் தேதி, நான்கு மண்டலக் குழுத் தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இரண்டாவது மண்டலக் குழுத் தலைவர் பதவிக்கு, கட்சி அறிவித்த வேட்பாளருக்கு எதிராக தி.மு.க மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.பி.ஏழுமலை போட்டி மனுவைத் தாக்கல் செய்தார்.
அவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு, கட்சி அறிவித்த வீனஸ் நரேந்திரன் இரண்டாவது மண்டலக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உடனே, கொதித்தெழுந்த ஆர்.பி.ஏழுமலை, மாமன்ற அரங்குக்குள்ளேயே மாவட்டச் செயலாளர் நந்தகுமாரையும், வேலூர் எம்.எல்.ஏ கார்த்திகேயனையும் வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்ததோடு, தூ என்று துப்பவும் செய்தார்.
இதனால், ஆர்.பி.ஏழுமலை மீது கடும் கோபத்தில் இருக்கிறது மாவட்டச் செயலாளர் தரப்பு. விரைவில், அவரிடமிருந்து கட்சிப் பதவியைப் பறித்து ஓரங்கட்டுவதற்கான வேலைகளிலும் இறங்கியிருக்கிறாராம் மாவட்டச் செயலாளர் நந்தகுமார்.
அணில் அமைச்சருக்கும் மீசை அமைச்சருக்கும் இடையே தொடர்ந்து பனிப்போர் நிலவிவருகிறதாம். சமீபத்தில் தி.மு.க கைப்பற்றிய கொங்கு மண்டல மாநகராட்சி ஒன்றின் உயரதிகாரி, மீசைக்கார அமைச்சருக்கு ஆதரவாகச் செயல்படவே, பஞ்சாயத்து கிளம்பியிருக்கிறது. இதனால் அணில் அமைச்சர் தரப்பில் சித்தரஞ்சன் நெட்வொர்க்கைப் பிடித்து, அந்த அதிகாரிக்குத் தேதி குறித்துவிட்டார்களாம். மிக விரைவில் அந்த உயரதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட இருக்கிறாராம்!
ராஜகண்ணப்பனின் கைவசமிருந்த போக்குவரத்துத் துறை, அமைச்சர் சிவசங்கருக்கு மாற்றிக்கொடுக்கப்பட்ட விஷயம், அரியலூர் அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறது. ‘கட்சித் தலைமையின் அதிருப்தி வலையில் சிக்கிக்கொண்டிருக்கும் ஆ.ராசாவுக்கு ‘செக்’ வைப்பதற்காகவே சிவசங்கருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது’ என்று அங்கு பேச்சு எழுந்துள்ளது. “அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஆ.ராசாவின் தலையீடு அதிகம். சிவசங்கரை ஓரங்கட்ட நினைக்கிறார்.
இரண்டு மாவட்டங்களிலும் முடிசூடா மன்னன்போல வலம்வருகிறார்” எனத் தலைமைக்கு உளவுத்துறையிலிருந்து சொல்லப்பட்டிருக்கிறது.இந்நிலையை மாற்ற வேண்டும் என்று தி.மு.க தலைமை நினைத்துக்கொண்டிருந்த நிலையில்தான், ராஜகண்ணப்பன் மீதான சர்ச்சை எழுந்தது. அதையொட்டி, அவரின் இலாகாவைப் பறித்து சிவசங்கரிடம் ஒப்படைத்துவிட்டு, சிவசங்கரின் இலாகாவை ராஜகண்ணப்பனுக்கு மாற்றிவிட்டார்கள். முக்கியத் துறை கிடைத்ததன் மூலம் சிவசங்கரின் செல்வாக்கு மாவட்டத்திலும் உயர்ந்திருக்கிறது’’ என்கிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள்!
தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு, கடைகள் மற்றும் காமராஜர் அரங்கம் ஆகியவற்றின் மூலம் வாடகையாகப் பல கோடி ரூபாய் வருவாய் வருகிறது. முன்பு மாநிலத் தலைவர்களாக இருந்தவர்கள், அவர்களாகவே முடிவுசெய்து இந்தப் பணத்தை எடுத்துக் கட்சிக்காகவும், கட்சி நிர்வாகிகளின் மருத்துவச் செலவுக்காகவும், மாணவர்களின் கல்வி உதவித்தொகை வழங்கவும் பயன்படுத்தி வந்தார்கள். நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு, டெல்லி தலைமை புதிய விதிகளைக் கொண்டுவந்தது.
அதன்படி, ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் எடுக்க வேண்டுமானால், அகில இந்திய தலைமையிடம் அனுமதி வாங்க வேண்டும். இப்போது முழுக் கட்டுப்பாடும் டெல்லிக்குச் சென்றுவிட்டது. ‘‘அதிலும், அகில இந்தியப் பொதுச்செயலாளர் வேணுகோபால் கட்டுப்பாட்டில் முழுப் பணமும் உள்ளது. வேணுகோபாலின் உறவினரான திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒருவர், இந்த நிதிகளைக் கண்காணிப்பதற்கு என்று நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்துடன், வீடு, கார் என சொகுசு வசதி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். தமிழக நிதியை நிர்வகிக்க கேரளப் பிரதிநிதியா?’’ என்று கொந்தளிக்கிறார்கள் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள்!