சென்னை,
தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் மற்றும் இந்திய கூடைப்பந்து சம்மேளனம் சார்பில் 71-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 10-ந் தேதி வரை நடக்கிறது.
இதில் ஆண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் பஞ்சாப், கேரளா, அரியானா, கர்நாடகா, தமிழ்நாடு, குஜராத், ராஜஸ்தான், இந்தியன் ரெயில்வே, சர்வீசஸ் உள்பட 16 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. தமிழக அணி ‘சி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது, உத்தரகாண்ட், டெல்லி, மிசோரம் ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.
பெண்கள் பிரிவில் அரியானா, உத்தரபிரதேசம், தெலுங்கானா, மேற்கு வங்காளம், பஞ்சாப் உள்பட 15 அணிகள் கலந்து கொள்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன. தமிழக அணி ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. அந்த பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியன் ரெயில்வே, டெல்லி, மராட்டியம் ஆகிய அணிகள் அங்கம் வகிக்கின்றன.
தேசிய போட்டிக்கான தமிழக ஆண்கள் மற்றும் பெண்கள் கூடைப்பந்து அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொடக்க நாளான இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் தமிழக பெண்கள் அணி, இந்தியன் ரெயில்வேயையும் (மாலை 4 மணி), தமிழக ஆண்கள் அணி, டெல்லியையும் (இரவு 7 மணி) எதிர்கொள்கிறது.
தேசிய சீனியர் கூடைப்பந்து போட்டி தமிழ்நாட்டில் அரங்கேறுவது இது 4-வது முறையாகும். கடைசியாக 2018-ம் ஆண்டு சென்னையில் நடந்த போட்டியில் தமிழக ஆண்கள் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்தது. தமிழக அணி இதுவரை 10 முறை சாம்பியன் பட்டத்தை தனதாக்கி இருக்கிறது. தமிழக பெண்கள் அணி அதிகபட்சமாக 2 முறை 2-வது இடம் பெற்றுள்ளது.
‘சர்வதேச போட்டிக்கு இணையான தரத்துடன் இந்த தேசிய போட்டி நடத்தப்படும்’ என்று போட்டிக்கான ஏற்பாடுகளை செய்து வரும் தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தின் தலைவர் ஆதவ் அர்ஜூனா நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.