உத்தரகன்னடா : குமட்டாவின் மாஸ்திஹள்ளா அருகில் தோட்டமொன்றில், கிராமத்தினரை அச்சுறுத்திய காளிங்க நாகம் பிடிபட்டது, வனத்துக்குள் விடப்பட்டது.உத்தரகன்னடா குமட்டாவின், மாஸ்திஹள்ளா அருகில், கனபு கவுடா என்பவரின் தோட்டம் உள்ளது. சில நாட்களுக்கு முன், இவரது தோட்டத்தில் காளிங்க நாகம் புகுந்தது.
இதை கவனித்த அவர், பாம்பு வனப்பகுதிக்கு சென்று விடும் என நினைத்து, மவுனமாக இருந்தார். ஆனால் ஒரு வாரமாக, தோட்டத்திலேயே சுற்றியது.தோட்டத்தின் அருகிலேயே, குடியிருப்பதால் பயம் வாட்டி, வதைத்தது. கிராமத்தினரும் கூட பயந்தனர். எனவே வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பாம்பின் நடமாட்டத்தை கண்காணித்தனர். நேற்று காலை வனத்துறையினர், பாம்பு வல்லுனர் பவன் நாயக்குடன், அங்கு வந்தனர்.
தோட்டத்தின் காம்பவுண்ட் அருகில் இருந்த பாம்பை பிடிக்க முற்பட்ட போது, பவன் நாயக்கை நோக்கி சீறி பாய்ந்தது. அவர் அங்கிருந்து விலகி சென்றார். அதன்பின் மரத்தின் மறைவிடத்தை நோக்கி சென்ற பாம்பின் வாலைப்பிடித்து, நீண்ட நேரம் போராடி பாம்பை பிடித்தார். 14 அடி நீளம், 9.50 கிலோ எடையுள்ள பாம்பை, ஆள் நடமாட்டமில்லாத வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டார்.பவன் நாயக் இதுவரை, 3,500 க்கும் மேற்பட்ட பாம்புகளை காப்பாற்றியுள்ளார். சிறுத்தை, முதலை, குரங்கு, காட்டுப்பன்றி உட்பட வன விலங்குகளை பிடிப்பதிலும், வனத்துறையினருக்கு உதவியுள்ளார்.
Advertisement