பாகிஸ்தானில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பிரதமர் இம்ரான் கானுக்கு ஆதரவு கொடுத்து வந்த கூட்டணி கட்சிகள் திடீரென தங்களது ஆதரவை விலக்கிக்கொண்டன. இதனால் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இம்ரான் கான் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தன. அதோடு இம்ரான் கானின் கட்சி அமைச்சர்கள் சிலர் உட்பட 50 அமைச்சர்கள் திடீரென காணாமல் போய்விட்டனர். பாகிஸ்தான் ராணுவமும் இம்ரான் கான் பதவி விலகவேண்டும் அல்லது தேர்தலைச் சந்திக்கவேண்டும் என்று நிபந்தனை விதித்தது. இதனால் இன்று நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடப்பதாக இருந்தது.
இதையடுத்து இம்ரான் கானின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியில் அதிக அளவில் கூடியிருந்தனர். அவர்களைப் பாதுகாப்புப் படையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதைத் தொடர்ந்து இம்ரான் கான் தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர், ஜனாதிபதி ஆரிப் அல்வியை இம்ரான் கான் சந்தித்து அரசியல் நிலவரம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திற்கு வந்துவிட்ட நிலையில், இம்ரான் கான் வருவது தாமதமானது. நாடாளுமன்றம் கூடி, நாடாளுமன்றத்தின் சட்ட அமைச்சர் பவேத் சவுத்ரி எழுந்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் அந்நிய சக்திகளின் சதி இருப்பதாகத் தெரிவித்தார். இதையடுத்து துணைச் சபாநாயகர் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ரத்து செய்வதாக அறிவித்தார். நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது அந்நிய சக்திகளின் சதி இருப்பதாகக் கூறி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ரத்து செய்வதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து இம்ரான் கான் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், ஜனாதிபதியிடம் தேர்தலுக்குப் பரிந்துரைத்திருப்பதாகத் தெரிவித்தார்.
நாடு தேர்தலுக்குத் தயாராகும்படியும் அவர் கேட்டுக்கொண்டார். ஜனாதிபதியிடம் நாடாளுமன்றத்தைக் கலைக்கும்படி கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். உடனே ஜனாதிபதியும் அதை ஏற்றார். மூன்று மாதங்களில் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இம்ரான் கானின் முடிவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரான பிலாவல் பூட்டோ இது தொடர்பாக அளித்த பேட்டியில், “நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த விடாமல் தடுத்ததன் மூலம் அரசு அரசியல் சாசன விதிகளை மீறி விட்டது. அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போகிறோம்” என்று தெரிவித்தார். அதோடு எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டன. அதையடுத்து, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாகத் தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
90 நாள்களில் மீண்டும் தேர்தல்!
பாகிஸ்தானில் அடுத்த 90 நாள்களில் தேர்தல் நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் பாகிஸ்தானிற்கு தற்போது நடக்கவிருக்கும் தேர்தல் கடும் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் அறிவிக்கப்பட இருப்பதால் தேர்தல் வரை இம்ரான் கான் பிரதமராகத் தொடருவார். பாகிஸ்தானிற்கு 1947-ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து இதுவரை எத்தனையோ பிரதமர்கள் பதவியிலிருந்திருக்கிறார்கள். ஆனால், ஒரு பிரதமர் கூட முழுமையான தனது பதவிக்காலத்தைப் பூர்த்தி செய்தது கிடையாது. ஒவ்வொரு முறையும் ராணுவம் உள்ளே புகுந்து குட்டையைக் குழப்பி விடும். பாகிஸ்தான் முதல் பிரதமர் லியாகத் அலிகான் படுகொலை செய்யப்பட்டுவிட்ட நிலையில், அடுத்த வந்த பிரதமர்கள் அனைவருமே பாதியில் பதவி விலகியவர்களாக இருந்தனர். அல்லது பதவியிலிருந்து அகற்றப்பட்டவர்களாக இருக்கின்றனர்.
பாகிஸ்தான் நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை எந்த பிரதமரும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து பதவி இழந்ததாகச் சரித்திரம் இல்லை. அதிகமான நேரங்களில் ராணுவம் ஆட்சியைப் பிடுங்கிக்கொள்ளும். அல்லது உச்ச நீதிமன்றம் பிரதமரின் பதவி செல்லாது என்று அறிவிக்கும். பாகிஸ்தான் வரலாற்றில் 13 நாள்கள் தொடங்கி அதிகபட்சம் 4.2 ஆண்டுகள் வரை மட்டுமே பிரதமராகப் பதவியேற்றவர்கள் பதவியிலிருந்திருக்கின்றனர். ராணுவ ஆட்சி அமைத்த பர்வேஸ் முஷாரப் மட்டும் 1999-ம் ஆண்டிலிருந்து 2008-ம் ஆண்டு வரை அதிக பட்சமாக ராணுவ ஆட்சி நடத்தியிருக்கிறார். ஆட்சியிலிருந்த பெரும்பாலானோர் அந்த நாட்டில் தொடர்ந்து இருக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். தற்போது கூட நவாஸ் செரீப், முஷாரப் ஆகியோர் தங்களது சொந்த நாட்டில் இல்லாமல் வேறு நாட்டில்தான் தஞ்சம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.