டெல்லியில் பணியில் இருந்த காவலர் ஒருவரை காளை மாடு முட்டியதில் அவர் படுகாயமடைந்தார்.
டெல்லியின் தயால்பூர் நகரில் உள்ளது ஷேர் செளக் பகுதி. இங்குள்ள மார்க்கெட் பகுதியில் கயான் சிங் (36) என்ற காவலர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்துக் கொண்டிருந்த பெரிய காளை மாடு ஒன்று, யாரும் எதிர்பாராதவிதமாக காவலர் கயான் சிங்கை முதுகில் முட்டியது. இதில் 4 அடி உயரத்திற்கு தூக்கி வீசப்பட்டு கயான் சிங் கீழே விழுந்தார்.
இந்த சம்பவத்தில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்தவர்கள் கயான் சிங்கை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
video courtesy: NDTV
டெல்லியின் தயால்பூர் நகரில் தெருக்களிலும், சாலைகளிலும் மாடுகள் சுற்றித்திரிவது தொடர் கதையாக மாறியுள்ளதாக அப்பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர். இந்த மாடுகளால் தினமும் அங்கு வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் விபத்தில் சிக்கி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பல முறை மாநகராட்சியில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM