அய்ஸ்வால்-மிசோரமில், ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் பரவத் துவங்கி உள்ளதால், பன்றிகள் மற்றும் பன்றி இறைச்சிகளை இறக்குமதி செய்ய மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வட கிழக்கு மாநிலமான மிசோரமில், முதல்வர் சோரம்தங்கா தலைமையிலான மிசோ தேசிய முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, 2020ல் ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவியது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாநிலத்தில் பன்றிகள் மற்றும் பன்றி இறைச்சிகளை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டது.
பரவலை தடுக்கும் வகையில் கடந்த ஆண்டு மட்டும், 10 ஆயிரம் பன்றிகள் கொல்லப்பட்டன. கடந்த டிசம்பரில் பன்றிக் காய்ச்சலின் பரவல் கட்டுக்குள் வந்தது.கடந்த பிப்., 1ம் தேதி, அந்த இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை திரும்பப் பெறப்பட்டது.இந்நிலையில், மிசோரமில் மீண்டும் ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் பரவத் துவங்கி உள்ளது.
இதனால், 384 பன்றிகள் இதுவரை உயிரிழந்துள்ளன. இதில் பெரும்பாலானவை ஐந்து மாவட்டங்களில் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது.இதையடுத்து, வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து, பன்றிகள் மற்றும் பன்றி இறைச்சிகளை இறக்குமதி செய்ய, மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Advertisement