பாதுகாப்பற்ற கருக்கலைப்பால் பெண் உயிரிழப்பு; மருந்தகங்களுக்கு நாமக்கல் ஆட்சியர் எச்சரிக்கை

நாமக்கல்லில் மருத்துவர் பரிந்துரையின்றி மருந்துக்கடையில் கருக்கலைப்பு மருந்து வாங்கி சாப்பிட்ட கர்ப்பிணியொருவர் அதனால் உயிரிழந்திருக்கிறார். இதைத்தொடர்ந்து `மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்தகங்களில் மருந்து விற்பனை செய்யக்கூடாது’ என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், மல்லசமுத்திரம் வட்டாரம், இராமாபுரம் கிராமத்தில் உள்ள கொசவம்பாளையத்தை சேர்ந்த கர்ப்பிணி ரம்யா (வயது 29). இவரது கணவர் பிரகாஷ் மல்லசமுத்திரம் பகுதியில் வசித்து வருகிறார். கர்ப்பிணியான ரம்யா, உடல்நலக்குறைவினால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்ததாக தகவல் வெளியானது.
கர்ப்பிணியொருவர் இறந்த செய்தியை வெளிவந்ததையடுத்து நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா பி சிங், குடும்ப நலத்துறை துணை இயக்குநர் மருத்துவர் வளர்மதி தலைமையில் அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள், காவல்துறை, வருவாய்த்துறை அலுவலர்களைக் கொண்ட குழு அமைத்து விசாரணை செய்து கர்ப்பிணி இறப்பின் உண்மைக் காரணத்தை அறிந்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தார்.
image
ஆட்சியர் உத்தரவு அளித்ததன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட குழுவினர், உயிரிழந்த ரம்யா தான் வசித்த பகுதியில் உள்ள மருதம் என்ற மருந்தகத்தில் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் கருகலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்டதை கண்டறிந்துள்ளனர். இதைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட ராமாபுரம் பகுதியில் உள்ள மருதம் மருந்தகத்தில் ஆய்வு செய்ய சென்றுள்ளனர். ஆனால் சம்பந்தப்பட்ட மருந்தகம் பூட்டியிருந்ததையடுத்து, மருந்தக உரிமையாளரை தொடர்பு கொள்ள முயன்றுள்ளனர். ஆனால் முறையாக அழைப்பு எடுக்கப்படவில்லையென சொல்லப்படுகிறது.
இதனால் மருந்தகத்தின் முன்புறம் வைக்கப்பட்டிருந்த மருந்து பெட்டிகளில் பயன்படுத்திய காலி ஊசிகள், ஊசிக் குழல்கள், மருதம் மருந்தகத்தின் விலாசம் கொண்ட பெட்டிகள் இருந்ததை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். நீண்ட நேரமாகியும் மருந்தகத்தின் உரிமையாளர் வராததையடுத்து, மருதம் மருந்தகம் 31.03.2022 அன்று சீல் வைக்கப்பட்டது.
அன்றைய தினமே இரவு சுமார் 10.30 மணியளவில் ராமாபுரம் மருதம் மருந்தகத்தின் மேற்கூரையை பிரித்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து மருந்து மாத்திரைகளை எடுத்து சென்று விட்டார்கள் என்று காவல்துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதுதொடர்பாக மல்லசமுத்திரம் வட்டார அலுவலர் மருத்துவர் மி.கா.கிருஷ்ணன் மல்லசமுத்திரம், `சீல் வைக்கப்பட்ட நிலையில் மருந்து மாத்திரைகளை எடுத்து சென்ற மருந்து கடை உரிமையாளர் முத்துசாமி என்பவரை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
image
இதற்கிடையில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று அறிக்கையொன்று விடுத்துள்ளார். அந்த அறிக்கையில், “கொரோனா பெருந்தொற்று காலத்தில் இருந்து தற்போது கருக்கலைப்பு செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் பெண்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் பயிற்சி பெறாத மருத்துவர், அங்கீகாரம் பெறாத மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களில் (மெடிக்கல் ஷாப்) கருக்கலைப்பு மாத்திரைகள் வாங்கி சாப்பிடுகின்றனர். இதனால் கர்ப்பத்தில் பக்கவிளைவுகள் மற்றும் அப்பெண்னே மரணிக்கும் நிலை ஏற்படுகின்றது.
தேவையற்ற மற்றும் வேண்டத்தகாத கர்ப்பங்களை பாதுகாப்பான முறையில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் கருக்கலைப்பு சிகிச்சை செய்து கொள்ளலாம். 7 வாரங்களுக்கு உட்பட்ட கர்ப்பங்களை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்களின் ஆலோசனைப்படி வாய்வழி உட்கொள்ளும் மாத்திரைகள் மூலமாக கருக்கலைப்பு செய்து கொள்ளலாம்.
மேலும் 10 வாரங்களுக்கு மேற்பட்ட கர்ப்பங்களை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், 20 வாரங்களுக்கு மேற்பட்ட கர்ப்பங்களை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் பாதுகாப்பாக கருக்கலைப்பு செய்து கொள்ளலாம். இதற்கு தங்கள் பகுதி கிராம சுகாதார செவிலியரை தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெறலாம்.
image
எனவே, தேவையற்ற கர்ப்பத்தை, கருக்கலைப்பு செய்து கொள்ள விரும்பும் கர்ப்பிணித் தாய்மார்கள், பயிற்சி பெறாத மருத்துவர்களிடமோ, அங்கீகாரம் பெறாத மருத்துவமனைகளிலோ கருக்கலைப்பு செய்ய மேற்கொள்ள வேண்டாம். மேலும் மருந்தகங்களில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனை செய்யக்கூடாத மருந்து, மாத்திரைகளை விற்பவர்கள் மீதும், போலி மருத்துவர்கள் மீதும் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்லைவர், தெரிவித்துள்ளார். மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்தகங்களில் மருந்து விற்பனை செய்யக்கூடாது” எனக் குறிப்பிட்டு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்
சமீபத்திய செய்தி: “1 – 5 வகுப்புகளுக்கு இறுதித் தேர்வு நடக்கும்… ஆனால்”- அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.