கரூர் மாவட்டம் நங்கவரம் பேரூராட்சியில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வருபவர் கருப்பையா. இவர், கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 2017-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை, இப்போது நகராட்சியாக உள்ள புஞ்சை புகலூர் பேரூராட்சியில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வந்தார். தற்போது, புகலூர் நகராட்சி அ.தி.மு.க செயலாளராக உள்ள கே.சி.விவேகானந்தன் என்பவர், சுப்பு கார்டன் என்ற பெயரில் உள்ள மனைகளுக்கு, உரிய முறையில் மனைப்பிரிவு அங்கீகாரம் பெறாத மனைகளுக்கு தடையின்மை சான்று கேட்டு, கருப்பையாவை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதற்கு இளநிலை உதவியாளராக பணியாற்றிய கருப்பையா மறுப்பு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், புகலூர் பேரூராட்சியில அப்போது பணியாற்றிய கருப்பையா நங்கவரம் பேரூராட்சிக்கு பணி இட மாற்றம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், பணிமாற்றம் செய்யப்பட்ட பிறகு தன்னுடைய கையெழுத்தை போலியாக கையொப்பமிட்டு தடையின்மை சான்றிதழ் பெற்று, கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அ.தி.மு.க நகர செயலாளர் விவேகானந்தன், அவர் மனைவி லலிதா, மாமியார் சரோஜா, ஜாகிர் உசேன், கண்ணன் ஆகிய ஐந்து நபர்கள் பெயரில் பத்திரப் பதிவு செய்துள்ளதாக குற்றம்சாட்டினார். இந்த மோசடியான பத்திரப் பதிவு காரணமாக, பேரூராட்சிக்கு ரூபாய் 15 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக, உதவி இயக்குநர் பேரூராட்சிகள், திண்டுக்கல் மண்டலத்திற்கு கருப்பையா அப்போது புகார் தெரிவித்தார்.
கரூர் மாவட்ட காவல்துறையிலும் புகார் கொடுத்ததையடுத்து, போலீஸார் விவேகானந்தன் உள்ளிட்ட 5 பேர் மீது, 9 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அதையடுத்து, தலைமறைவாக இருந்த விவேகானந்தனை கரூர், கோவை சாலையில் பதுங்கியிருந்தபோது, பசுபதிபாளையம் காவல் நிலைய போலீஸார் அவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் அலுவலகத்தில் வைத்து, தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரனைக்குப் பிறகு சிறையில் அடைத்தனர்.