கிறைஸ்ட்சர்ச்: மகளிர் உலக கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி, சாம்பியன் பட்டத்தை பெற்றது. இது ஆஸி., அணி வெல்லும் 7வது உலக கோப்பையாகும்.
நியூசிலாந்தில் 12வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் நடைபெறுகிறது. இதன் இறுதிப்போட்டி கிறைஸ்ட்சர்ச் நகரில் இன்று (ஏப்ரல் 3) நடைபெற்றது. இதில் 6 முறை உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலியாவும், நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும் மோதின. இரு நாடுகளும் உலக கோப்பை இறுதிப்போட்டியில் கடைசியாக 1988ம் ஆண்டு மோதியது குறிப்பிடத்தக்கது. ‛டாஸ்’ வென்ற இங்கிலாந்து மகளிர் அணி கேப்டன் ஹீதர் நைட், பவுலிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி பேட்டிங்கை துவக்கிய ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீராங்கனைகள் அலிசா ஹீலி, ரேச்சல் ஹெய்ன்ஸ் ஆகியோர் அதிரடியாக ரன் சேர்த்தனர். முதல் விக்கெட்டுக்கு 160 ரன்கள் சேர்த்த நிலையில், ரேச்சல் 68 ரன்னில் அவுட்டானார். அடுத்துவந்த பெத் மூனி கைகொடுக்க, தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்ட அலிசா ஹீலி 150 ரன்களை கடந்தார். அணியின் ஸ்கோர் 316 ஆக இருந்தபோது அலிசா 26 பவுண்டரிகளுடன் 170 ரன்கள் குவித்து ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். பெத் மூனி தன் பங்குக்கு 62 ரன்கள் எடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் குவித்தது. இங்கி., தரப்பில் அன்யா ஷ்ரப்சோல் 3 விக்கெட் வீழ்த்தினார்.
357 என்னும் கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு டாமி பியூமண்ட் (27), டேனி வியாட் (4), கேப்டன் ஹீதர் நைட் (26) ஏமாற்றம் தந்தனர். ஒருபக்கம் நாட் ஸ்கிவர் போராடிக்கொண்டிருக்க, மற்ற வீராங்கனைகள் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர். இதனால், இங்கிலாந்து மகளிர் அணி 43.4 ஓவர்களில் 285 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. நாட் ஸ்கிவர் 148 ரன்களுடன் இறுதிவரை அவுட்டாகாமல் இருந்தார். இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று 7வது முறையாக உலக கோப்பையை வென்று அசத்தியது. சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு ரூ.10 கோடி பரிசாக வழங்கப்பட்டது.
Advertisement