கொழம்பு: மதம், இனம், கட்சி, நம்பிக்கைகளை ஒதுக்கிவிட்டு ஒரே தேசமாக நில்லுங்கள் என மக்களுக்கு இலங்கை முன்னாள் கிரிகெட் கேப்டன் ரோஷன் மஹாநாம வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் 12 மணி நேரம் வரைமின்வெட்டு அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இலங்கை கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதால் நாட்டின் 90% உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுள்ளன. வரலாற்றில் இல்லாத அளவு இலங்கை நிலைக்குலைந்துள்ளது. இதனால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
போராட்டங்களை தடுக்க இலங்கையில் அவசர நிலை போடப்பட்டுள்ளது.திங்கட்கிழமை காலை வரை நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மக்களுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோஷன் மஹாநாம நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், “ நமது திறமையற்ற அதிகார வெறி பிடித்த ஆட்சியாளர்களால், பொருளாதார மந்தநிலையின் விளிம்பில் இருக்கும் என் நாட்டின் நிலையைக் கண்டு வேதனையுடன், மிகவும் கனத்த இதயத்துடன் இந்தப் பதிவை எழுதுகிறேன்.
இந்த நாட்டின் தலைவர்கள் என்று சொல்லி கொள்பவர்களைவிட எனது நாட்டை நான் அதிகம் நேசிக்கிறேன். ஏனெனில் எனக்கு வாய்ப்பு கிடைத்தபோதும் நான் நாட்டைவிட்டு வெளியேறவில்லை. இந்த நேரத்தில் மதம், இனம், அரசியல் கட்சிகள், நம்பிக்கைகள் ஆகியவற்றை ஒதுக்கிவிட்டு ஒரே தேசமாக நிற்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
போதும்!!..
இந்த இருண்ட காலத்திலிருந்து அழகிய நமது தாய் நாட்டை விடு்வித்து எமது எதிர்கால சந்ததியினருக்கு அமைதியான சூழலை உருவாக்குவதற்கான பொதுவான நோக்கத்துடன் இந்த நாட்டு மக்களுடன் ஒன்றாக நான் நிற்கிறேன்“ என்று பதிவிட்டுள்ளார்,