மதுரையில் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் ஆதாரத்துடன் சிக்கிய மாவட்ட ஆட்சியரின் தனி நேர்முக உதவியாளர்கள் இருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
சோழவந்தானை சேர்ந்த ஜெகஜீவன் என்பவர் தனக்கு சொந்தமான நன்செய் நிலத்தை புன்செய் நிலமாக மாற்றுவதற்கு தடையில்லா சான்று கோரி மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பத்திருந்தார்.
ஆட்சியரின் நேர்முக உதவியாளர்களான சுரேஷ், இப்ராஹிம் ஆகியோர் ஆட்சியரின் கார் ஓட்டுநர் திருப்பதி வாயிலாக ஜெகஜீவனிடம் 50 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். இது தொடர்பாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஜெகஜீவன் புகார் அளித்தார்.
ஜெகஜீவனின் செல்போன் எண்ணில் இருந்து சுரேஷுக்குப் போன் செய்து, லஞ்சம் குறித்து அவனை பேசவைத்து ஆடியோவை பதிவு செய்த போலீசார், அதனை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து சுரேஷை கிழக்கு பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்திற்கும், இப்ராஹிம்-ஐ மதுரை வடக்கு தனித்துணை ஆட்சியர் அலுவலகத்திற்கும் பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டார். ஓட்டுநர் திருப்பதி காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.