கடும் பொருளாதார நெருக்கடி, மின்வெட்டு போன்ற பிரச்சினைகளால் தவிக்கும் இலங்கைக்கு உதவ மத்திய அரசு 40 ஆயிரம் மெட்ரிக் டன் டீசலை அனுப்பி வைத்துள்ளதால் மின்வெட்டு நேரம் குறைந்துள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் கடந்த வியாழக்கிழமை முதல் 13 மணி நேர மின்வெட்டு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் அவசரமாக இந்தியா அனுப்பி வைத்த 40 ஆயிரம் டன் டீசல் இலங்கையை சென்றடைந்தது.
இந்தியா அனுப்பி வைத்த டீசல் மின்வெட்டு நேரத்தைக் குறைக்க உதவும் என்று சிலோன் மின்வாரியம் அறிவித்துள்ளது. இதனால் நேற்றைய மின்வெட்டு எட்டரை மணி நேரமாக குறைந்தது. இதனிடையே 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி மூட்டைகளை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்காக வணிகர்கள் கப்பலில் ஏற்றி வருகின்றனர்.
அந்நியச் செலாவணி வீழ்ச்சி, பண வீக்கம், எரிபொருள், உணவுத் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் அங்கு அத்தியாவசிய பொருட்கள் விண்ணை எட்டும் அளவுக்கு விலை உயர்ந்துள்ளன. அதிபரை கண்டித்து அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து நாடு தழுவிய அவசர நிலை அறிவிக்கப்பட்டது.
தற்போது 36 மணி நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் சந்தைகளில் திரண்டனர்.
கடும் விலை உயர்வால் தேவையான பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் திணறினர். எரிபொருள் வாங்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தவறான தகவல் பரவுவதை தடுக்க பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை இலங்கை அரசு முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.