கவுகாத்தி: தடைகளை முன்னெச்சரிக்கும் கருவியுடன் கூடிய பார்வையற்றோருக்கு உதவும் ஸ்மார்ட் காலணிகளை அசாம் மாநிலத்தின் கரீம்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு பயிலும் சிறுவன் உருவாக்கியுள்ளார்.
நம்மில் பலர் எதையாவது வித்தியாசமாக செய்யவேண்டும், சாதிக்கவேண்டும் என நினைத்து சாகசங்கள் என்ற பெயரில் எதைஎதையோ வினோதமாக செய்வதை பார்த்துவருகிறோம். ஆனால் மனிதநேயத்துடன் ஒரு கண்டுபிடிப்பில் ஈடுபடுவது என்பது சிலருக்கு மட்டுமே தோன்றுகிறது. அவ்வகையில் கரீம்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ரோலண்ட்ஸ் மெமோரியல் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவர் அன்குரித் கர்மாகரின் புதிய கண்டுபிடிப்பு பார்வையற்றோருக்கு பயன்படும் வகையில் அமைந்துள்ளது. சாதாரணமாக பார்வையற்றோர் சாலையில் நடந்துசெல்லும்போது சிறு கல்லிலும் இடித்துக்கொள்ள வாய்ப்புகள் உண்டு. இதனாலேயே அவர்கள் மிகவும் மெதுவாக, தன்னிடம் உள்ள கோலை தரையில் தட்டித்தட்டி அதைப் பின்பற்றி நடப்பது வழக்கம். அவர்களுக்கு உதவும் வகையில் கர்மாகர் ஒரு தொழில்நுட்ப ரீதியாக யோசித்து புதியதாக ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்.
பார்வையற்றோர் நடந்து செல்லும் போது அவர்களுக்கு ஏற்படும் சின்னச்சின்ன இடையூறுகளில் இருந்து அவர்களை பாதுகாக்க மிகவும் நவீனத்தன்மையோடு ஸ்மார்ட் ஷூவை கர்மாகர் வடிவமைத்துள்ளார்.
இதுகுறித்து 9ஆம் வகுப்பு மாணவரான கர்மாகர் ஏஎன்ஐயிடம் கூறுகையில், “பார்வையற்றவர்களுக்காக இந்த ஸ்மார்ட் ஷூவை தயாரித்துள்ளேன். பார்வையற்றவர் செல்லும் வழியில் அவர்களுக்கு தடை ஏற்பட்டால், ஷூவில் உள்ள சென்சார் கருவி என்ன தடை என்பதைக் கண்டறிந்து, பஸ்ஸர் எச்சரிக்கை கொடுக்கும். பஸ்ஸர் அடிக்கும் போது, பார்வையற்ற நபர் அதைக் கேட்க முடியும், மேலும் அவர் எச்சரிக்கையாகி, தடையைத் தவிர்க்கலாம். அதற்கேற்ப அவர்கள் செயல்பட முடியும்.
யுகேவைச் சேர்ந்த ஒருவரால்தான், இந்த ஸ்மார்ட் காலணியை வடிவமைக்க நான் தூண்டப்பட்டேன், அவர் உருவாக்கிய அதே வகையான காலணியிலிருந்து சற்று மாறுபட்டு யோசித்து மேலும் நவீனத் தன்மையோடு இதனை உருவாக்கியுள்ளேன். எதிர்காலத்தில் விஞ்ஞானி ஆக வேண்டும் என்பதே எனது லட்சியம். மக்களுக்கு உதவும் இதுபோன்ற உருவாக்கங்களில் நான் தொடர்ந்து ஈடுபடுவேன்” என்றார்.