ரசிகர்களின் வன்முறைகளை தடுத்திடுக; பிஸ்ட் திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளை ரத்து செய்ய வேண்டும்: பால் முகவர் சங்கம் கோரிக்கை

ரசிகர்களின் வன்முறைகளை தடுக்கும் பொருட்டு பிஸ்ட் திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளை ரத்து செய்ய வேண்டும் என தமிழக பால் முகவர்கள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து பொன்னுசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில், “ நடிகர் விஜய் நடித்த #பீஸ்ட் திரைப்படத்தின் டிரெய்லர் சனிக்கிழமை வெளியான நிலையில் திருநெல்வேலி ராம் திரையரங்கில் டிரெய்லர் பார்க்க வந்த ரசிகர்கள் திரையரங்க இருக்கைகளை அடித்து உடைத்து துவம்சம் செய்துள்ள நிகழ்வு கடும் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. பொறுப்பற்ற தன்மையோடு வன்முறை செயலில் ஈடுபட்ட நடிகர் விஜய் ரசிகர்களின் காட்டுமிராண்டித்தனமான செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் தான் உள்ளது என முன்னோர் சொன்ன கூற்று தற்போது திரையரங்குகளில் வீணாகி வருவது மிகுந்த வேதனையளிக்கிறது.

தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கும் பீஸ்ட் பட டிரெய்லர் வெளியீட்டின் போதே நடிகர் விஜய்யின் ரசிகர்கள் வன்முறை செயலில் ஈடுபட்டுள்ளதை காணும் போது அப்படம் பிரதானமாக வெளியாகும் போது தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் என்ன நடக்குமோ.? என்கிற திக்.! திக்..!! திக்…!!! அச்ச உணர்வே மேலோங்குவதோடு மற்ற நடிகர்களின் ரசிகர்களோடு நடிகர் விஜய் ரசிகர்கள் மோதல் போக்கை கடைபிடித்து அதன் காரணமாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை உருவாகுவதற்கான சூழல் இருப்பதையே இந்நிகழ்வு உணர்த்துகிறது.

எனவே ஏப்ரல்-13ம் தேதியன்று தமிழகத்தில் வெளியாக இருக்கும் #பீஸ்ட் பட வெளியீட்டின் போது வன்முறை சம்பவங்கள் நிகழ்வதை தடுக்கும் பொருட்டும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் ஏப்ரல் 13ம் தேதி நள்ளிரவு முதல் அனைத்து திரையரங்குகளிலும் அத்திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் வெளியிடவும், திரையரங்க வளாகங்களில் வைக்கப்பட்டிருக்கும் சம்பந்தப்பட்ட நடிகரின் நூறடிக்கும் மேலான கட்அவுட்டுகள் மீதேறி ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்வதால் அவர்கள் கீழே விழுந்து உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதோடு, திரைப்படம் காண வரும் பொதுமக்களுக்கும் அது இடையூறு ஏற்படுத்தும் என்பதால் திரையரங்கு வளாகங்களில் மிகப்பெரிய அளவிலான கட்அவுட்டுகள் வைக்கவும், அதன் மீதேறி மாலை அணிவித்து பாலாபிஷேகம் செய்து பாலினை வீணடிக்கவும் நிரந்தரமாக தடை விதிப்பதோடு, காவல்துறையின் பாதுகாப்பினை அதிகப்படுத்தவும், அத்துடன் வன்முறை செயலில் ஈடுபடும் ரசிகர்கள் மீதும், அவர்களின் பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.