பாட்னா :பாட்னாவின் என்.ஐ.டி., கல்வி நிறுவனத்தில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில், 1.6 கோடி ரூபாய் சம்பளத்தில், அதிதி திவாரி என்ற மாணவிக்கு வேலை கிடைத்துள்ளது.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ., கூட்டணி ஆட்சிநடக்கிறது.இங்குள்ள கல்லுாரிகளில், கொரோனா அச்சுறுத்தலால், கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடக்கவில்லை. தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு, வெளியே வேலை தேட வேண்டிய சூழல் ஏற்பட்டது.தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால், மீண்டும் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதையடுத்து, வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன்படி, பாட்னாவில் உள்ள என்.ஐ.டி., எனப்படும் தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில், இந்த கல்வியாண்டுக்கான வேலைவாய்ப்பு முகாம் சமீபத்தில் நடத்தப்பட்டது.இந்த ஆண்டு, கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, அதிக எண்ணிக்கையிலான மாணவ – மாணவி யருக்கு வேலை கிடைத்து உள்ளது.இதில், அதிகபட்சமாக, அதிதி திவாரி என்ற பொறியியல் மாணவிக்கு, 1.6 கோடி ரூபாய் வருடாந்திர சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது.இவரது தந்தை, ‘டாடா ஸ்டீல்’ நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்; அதிதி யின் தாய், அரசு பள்ளி ஆசிரியை.மிக அதிக சம்பளத்தில் வேலை பெறும் மாணவி என்ற பெருமையை, அதிதி பெற்றுள்ளது
குறிப்பிடத்தக்கது.
Advertisement