ஏடிஎம் எண் மற்றும் வங்கி கணக்குகளை பெற்று பண மோசடி நடைபெறுவதை தடுப்பது குறித்து பெரியகுளத்தில் மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் போலீஸார் அறிவுரை வழங்கினார்.
ஏடிஎம் அட்டையை புதுப்பிக்க வேண்டும்; வங்கி கணக்குகளை புதுப்பிக்க வேண்டும் என பொதுமக்களை செல்போனில் அழைத்து, வங்கி கணக்குகளின் ரகசிய பதிவுகளை பெற்று பல லட்சம் ரூபாய் மோசடி செய்வது தொடர்கதையாகி வருகிறது.
இதனைத் தடுக்க, வங்கி நிர்வாகமும் விழிப்புணர்வு செய்திகளை வெளியிட்டு வரும் போதிலும், தொடர்ந்து பண மோசடிகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இவை அனைத்தையும் தடுக்கும் விதமாக சைபர் கிரைம் காவல்துறையினர் 1930 என்ற இலவச செல்போன் எண்ணை வெளியிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக பெரியகுளம் வடகரை காவல் நிலையத்தில் போலீஸாருக்கு பெரியகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்துக்குமார் சில அறிவுறுத்தல்களை வழங்கினார். வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை பறிக்கும் கும்பலிடம் இருந்து பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பணத்தை மீட்டுக் கொடுப்பது எப்படி எனவும் அவர் போலீஸாருக்கு விளக்கிக் கூறினார். மேலும், இதுபோன்று வங்கி மோசடியில் பாதிக்கப்பட்ட நபர்கள் வரும்பொழுது அவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் அவர் எடுத்துக் கூறினார்.
மேலும், வங்கி கணக்குகளில் இருந்து நூதன முறையில் பணம் பறிபோகும்போது பாதிக்கப்பட்ட நபர்கள் உடனடியாக 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்வது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்துக்குமார் அறிவுறுத்தினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM