சேலம், கொண்டலாம்பட்டி சட்டமன்ற அலுவலகத்தில் நேற்று கோடைக்கால நீர்மோர்ப் பந்தலை அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு முழுவதும் நிலைகுலைந்து போய்விட்டது. பெண்களுக்கான பாதுகாப்பு என்பது இங்கு இல்லை. நாளுக்குநாள் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். தமிழக அரசு இதை வேடிக்கை பார்த்து வருகிறது.
கடந்த 2 ஆண்டுக் காலம் கொரோனா காரணமாக மக்கள் கடுமையான நெருக்கடியில் வாழ்ந்து வந்த நிலையில், தமிழக அரசு சொத்துவரி எனும் பெயரில் 150 சதவிகிதம் உயர்த்தி நெருக்கடியை அளித்திருப்பது வேதனைக்குரியது. வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு விஷயத்தில் நூற்றுக்கு நூறு தி.மு.க அரசு துரோகம் இழைத்துவிட்டது. அ.தி.மு.க ஆட்சியில் வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு தொடர்பாகச் சரியான சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைக்குக் கொண்டுவந்தோம். ஆனால், நாங்கள் பட்ட கஷ்டங்களையெல்லாம் எல்லாம் இந்த அரசு முழுவதுமாக வீணடித்துவிட்டது.
இதுதொடர்பான முழு தரவுகளை மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யவில்லை. மேல்முறையீடு செய்யும்போது, உச்ச நீதிமன்றம் அந்த தரவுகளை வைத்துத்தான் விசாரிக்கும். ஆனால் இவர்கள் ஒன்றுமே சமர்ப்பிக்கவில்லை, அதனால் வழக்கு நிலைக்கவில்லை. தி.மு.க அரசு இந்தத் திட்டம் அ.தி.மு.க கொண்டுவந்த திட்டம் என்பதால்தான் இப்படிச் செய்து விட்டது.
அதேபோல, திராவிட முன்னேற்றக் கழகம் சமூக நீதிக்குப் போராடுகிறது, குரல் கொடுக்கிறது என்று சொல்கிறார்கள். ஆனால், ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு பட்டியலின வட்டார வளர்ச்சி அதிகாரியை தி.மு.க-வைச் சேர்ந்த ஒரு அமைச்சர் சாதியைச் சொல்லித் திட்டுகிறார். அவர் மனம் நொந்து கடைசிக் கட்டமாக ஊடகத்தின் வாயிலாக தன்னுடைய மன அழுத்தத்தை வெளியே தெரிவிக்கிறார். இதற்குப் பரிகாரமாக அமைச்சரை நீக்கியிருந்தால் பரவாயில்லை, அந்த அமைச்சருக்கு மாற்றுத் துறை கொடுக்கிறார் தமிழக முதல்வர். இதில் எங்கு சமூக நீதி பாதுகாக்கப்படுகிறது. இதில் இந்தியா முழுவதும் சமூக நீதியைப் பாதுகாக்கப் போகிறோம் என்று சொல்கிறார். இங்கயே ஒன்னும் பண்ணல இவர் எங்க இந்தியா முழுவதும் பண்ண போராரு, இதுல இவரை இவரே சூப்பர் முதலமைச்சர்னு சொல்லிக்கிறாரு. என்னத்த சொல்றதுனு தெரியல போங்க” என்றார் காட்டமாக.