புதுடெல்லி: ‘புதிய நிதியாண்டில் ஒன்றிய அரசின் கூடுதல் வரிகளால் சாமானிய மக்கள் மீது ₹1.25 லட்சம் கோடி சுமை ஏற்றப்பட்டுள்ளது’ என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், தலைமை செய்தித் தொடர்பாளருமான ரன்தீப் சுர்ஜிவாலா நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:‘தேர்தல் வெற்றி என்பது கொள்ளை அடிப்பதற்கான உரிமை’ என்பது ஒன்றிய அரசின் புதிய கோட்பாடாகி உள்ளது. இம்மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள விலைவாசி உயர்வு, நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் பட்ஜெட்டையும் சிதைத்து விட்டது. இது, ஒவ்வொரு குடும்பத்தின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தின் மீது தாக்குதல் நடத்துகிறது. டிஏபி உரத்தின் விலை மூட்டைக்கு ₹150ம், என்பிகேஎஸ் உரம் மூட்டைக்கு ₹110ம் உயர்த்தப்பட்டதன் மூலம் 62 கோடி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது சுமார் ₹7,000 கோடி கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. கடந்த 12 நாட்களில் 10 முறை ‘காலை பரிசாக’ பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு, லிட்டருக்கு ₹7.20 அதிகரித்துள்ளது. பெட்ரோல் விலை உயர்வால் மக்கள் மீது ₹20,138 கோடியும், டீசல் விலை உயர்வால் ஆண்டுக்கு ₹52,353 கோடியும் கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. வீட்டு உபயோக மற்றும் வர்த்தக காஸ் சிலிண்டர் விலை உயர்வால் ₹27,095 கோடியும், தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கவரி உயர்வால் ₹6,120 கோடியும் கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. 800 அத்தியவாசி மருந்துகளின் விலை உயர்வால் ₹10,000 கோடி சாமானிய மக்கள் மீது சுமை ஏற்பட்டுள்ளது.இதுதவிர, ஐடி சட்டத்தின் பிரிவு 80இஇஏன் கீழ் வழங்கப்பட்டு வந்த வீட்டு கடனுக்கான ₹1.5 லட்சம் வரி விலக்கு திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதோடு, பிஎப்பில் ₹25 லட்சத்துக்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு வட்டிக்கு வரி விதிக்கப்படுகிறது. இந்த விலைவாசி உயர்வுகள் மூலம் பல பொருட்களின் விலையும் உயர்ந்து, புதிய நிதியாண்டில் மக்கள் மீது ₹1.25 லட்சம் கோடி கூடுதல் சுமையை ஒன்றிய அரசு ஏற்றி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.பாஜ.வின் கைக்கூலி சிபிஐ.யை நீதிபதிகள் தண்டிக்க வேண்டும்உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா நேற்று முன்தினம் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘ஆட்சியில் இருப்பவர்களின் அன்பையும், நன்மதிப்பையும் பெற விரும்பும் போலீசாரும், சிபிஐ போன்ற புலனாய்வு அமைப்பை சேர்ந்தவர்களும் அதற்கான பின்விளைவுகளை சந்தித்துதான் ஆக வேண்டும்,’ என்று எச்சரித்தார். இதற்கு பதிலளித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, ‘‘கடுமையான வார்த்தை பிரயோகம் மட்டும் போதாது. பாஜ.வின் கைக்கூலியாக செயல்படும் சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற அமைப்புகளை கட்டுப்படுத்தி நீதிபதிகள் தண்டிக்க வேண்டும்,’ என்று தெரிவித்தார்.