மைசூரு : ஹுன்சூரில் மூன்று, நான்கு நாட்களாக பரவலாக மழை பெய்வதால், விளைச்சல் சேதமடைந்தது. மின் கம்பங்கள், மரங்கள் மண்ணில் சாய்ந்தது. பல இடங்களில் மின்சாரம் தடைபட்டதால், மக்கள் பாதிக்கப்பட்டனர்.மைசூரு ஹுன்சூரில், சில நாட்களாக பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்கிறது. சாலைகள் ஏரிகளாக காட்சியளிக்கின்றன.
பல இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது.சிக்கஹுன்சூரின், மாரியம்மாவின் ஐந்து ஏக்கர் தோட்டத்தில், அறுவடைக்கு தயாராக இருந்த நேந்திரன் வாழை பாழானது. அவருக்கு எட்டு லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு நிவாரணம் வழங்கும்படி, அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மாமரம், பாக்கு செடிகளும் கூட சேதமடைந்தது.பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால், காவடகரேவில் ஐந்து, கிரிஜாஜியில் நான்கு, தொட்ட ஹெஜ்ஜூரில் இரண்டு, செல்குன்டாவில் ஒன்று என, 12 மின் கம்பங்கள் தரையில் உருண்டது. சிக்கஹுன்சூரில், பெரிய ஆலமரம், மாமரம் விழுந்ததில், இரு சக்கர வாகனம் நொறுங்கியது.கட்டெமளவாடியில் வீடு ஒன்றின் மீது, மின் கம்பியுடன் மரம் விழுந்ததில், மேற்கூரை சேதமடைந்தது. கிராமம் முழுவதும் இருட்டில் மூழ்கியது. வனத்துறை ஊழியர்கள், சாலைக்கு குறுக்கே விழுந்திருந்த மரங்களை அப்புறப்படுத்தி, சுமூகமான போக்குவரத்துக்கு வழி வகுத்தனர்.செஸ்காம் ஊழியர்கள், மின் பாதையை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement