திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடந்தோறும் சித்திரை விஷு பண்டிகையை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இவ்வருட சித்திரை விஷு பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வரும் 10ம் தேதி மாலை சபரிமலை கோயில் நடை திறக்கப்படுகிறது. அன்று பூஜைகள் எதுவும் நடைபெறாது. மறுநாள் (11ம் தேதி) முதல் 18ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. 15ம் தேதி சித்திரை விஷு கனி காணும் நிகழ்வு நடைபெறுகிறது. 18ம் தேதி இரவு கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் சித்திரை விஷு சிறப்பு பூஜைகள் நிறைவடையும். 10ம் தேதி நடை திறக்கப்படுவதை முன்னிட்டு தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று முதல் தொடங்கியது. தரிசனத்திற்கு எண்ணிக்கை கட்டுப்பாடு எதுவும் இல்லாததால் முன்பதிவு செய்யும் அனைத்து பக்தர்களும் தரிசனம் செய்யலாம். நிலக்கல்லில் உடனடி முன்பதிவு வசதியும் செய்யப்பட்டுள்ளது.