அமராவதி: ஆந்திரா மாநிலம் தற்போது 13 மாவட்டங்களை கொண்டு நிர்வகிக்கப்படும் நிலையில் அதனை இரட்டிப்பாக்கி நாளை மேலும் 13 புதிய மாவட்டங்களை அறிவிக்கிறார் முதல்வர் ஜெகன் மோகன்.
ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. 2019 லோக்சபா தேர்தலின் போது ஒவ்வொரு எம்.பி., தொகுதியும் மாவட்டங்களாக அறிவிக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. ஜனவரியில் 13 புதிய மாவட்டங்களை பிரிப்பதற்கான வரைவு அறிவிப்பை வெளியிட்டு, பரிந்துரைகள் மற்றும் ஆட்சேபனைகளை கேட்டது. அதனடிப்படையில் 13 புதிய மாவட்டங்களுக்கான அறிவிப்பை அரசிதழிலில் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக ஆந்திர அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது: புதிய மாவட்டங்களின் மறுசீரமைப்பு செயல்முறையை சுமூகமாக்க முதல்வர் வழிகாட்டுதலின் கீழ் நான்கு துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. புதிய மாவட்டங்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்த நிலையில், 13 புதிய மாவட்டங்களை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நாளை தொடங்கி வைக்கிறார். புதிய மாவட்டங்களின் இணையதளங்கள் மற்றும் கையேடுகளை வெளியிடுவார். ஏப்ரல் 4ல் மாவட்ட அலுவலகங்களில் அதிகாரிகள் பொறுப்பேற்கும் வகையில் அலுவலக ஒதுக்கீடு பணிகளை எளிதாக்க உத்தரவிட்டுள்ளார் என கூறியுள்ளனர்.
Advertisement