பெங்களூரு : ஏறத்தாழ 15 ஆண்டுக்கு மேற்பட்ட பழைய வாகனங்களுக்கு 60 சதவீதம் பசுமை வரியை உயர்த்தியுள்ள கர்நாடக அரசுக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.இந்தியாவில் 15 ஆண்டுக்கும் மேற்பட்ட பழைய வாகனங்களை தடை செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுஇருந்தது.
இதற்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து பழைய வாகனங்களின் மீது வரியை உயர்த்துமாறு மத்திய அரசு அரசாணை வெளியிட்டது.இதையடுத்து கர்நாடக அரசு, பழைய வாகனங்களின் மீது பசுமை வரி விதித்துள்ளது. இந்த உத்தரவு நேற்று முன் தினம் அமலுக்கு வந்தது. இதற்கு முன், ஏழு ஆண்டு பழைய வாகனங்களுக்கு பெயரளவில் மட்டுமே அரசு வரி வசூலித்து வந்தது. அதன்படி இரு சக்கர வாகனங்களுக்கு 250 ரூபாய்; கார் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 500 ரூபாய்; சரக்கு வாகனங்களுக்கு 200 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டது.இனிமேல் இரு சக்கர வாகனங்களுக்கு எப்.சி., எனப்படும் தகுதி சான்றிதழ் பெறும் போது 1,000 ரூபாய்; பரிசோதனைக்கு 400 முதல் 500 ரூபாய்; கார்களுக்கு 4,500 ரூபாய், நடுத்தர கனரக வாகனங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய்; பெரிய கனரக வாகனங்களுக்கு 12 ஆயிரம் ரூபாயும் செலுத்த வேண்டும் என கர்நாடக அரசு உத்தர விட்டுள்ளது.கடந்த 2021 மார்ச் புள்ளி விபரத்தின்படி கர்நாடகாவில் 15 ஆண்டை கடந்த, 70.29 லட்சம் வாகனங்கள் இருப்பதாக தெரியந்துள்ளது. இதில், 45.62 லட்சம் இரு சக்கர வாகனம், 11.7 லட்சம் கார்கள், 2.04 லட்சம் லாரிகள், 2.19 லட்சம் இலகு ரக சரக்கு வாகனங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கர்நாடக அரசின் முடிவுக்கு லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சென்னா ரெட்டி கண்டனம் தெரிவித்து அவர் கூறுகையில், “புதிய வாகனங்கள் தொலைதுாரத்துக்கும், நல்ல நிலையில் இருக்கும் வாகனங்கள் மாநிலங்களுக்கு இடையேயும், பழைய வாகனங்களை குறைந்த துாரத்துக்கு உரிமையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ”அப்படி இருக்கும் போது புதிய விதிமுறைகள், அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதற்கு வழி வகுக்கும்,” என்றார்.
Advertisement