அல்டிமேட் சீசன் அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு போட்டியாளரின் மீதான தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் ஆகியவற்றைத் தாண்டி ஒட்டுமொத்தமாக இந்த சீசன் முழுவதும் நன்றாக விளையாடியவர் யார் என்பதை கறாராக பரிசிலீத்து இறுதி வாரத்தில் வாக்களிப்பதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும்.
இந்த வாரம் அபிராமி எலிமினேட் ஆகியிருப்பதாக ஒரு தகவல் வந்திருக்கிறது. பரிசுத் தொகைக்காக நடந்த டாஸ்க்கில் அபிராமியும் கலந்து கொண்டிருந்தால் ஆட்டம் சுவாரஸ்யமாகியிருக்கலாம்.
நாள் 62-ல் நடந்தது என்ன?
வழக்கம் போல ஒரு டாஸ்க்கை பாதிலியிருந்து காட்ட ஆரம்பித்தார் பிக் பாஸ். யாருக்காக உழைக்கிறோம் என்பது தெரியாமலேயே உழைத்துக் கொண்டிருக்கும் ஒரு அப்பாவியான தொழிலாளியைப் போல யாருக்காக சைக்கிள் ஓட்டுகிறோம் என்பது தெரியாமல் தொடர்ந்து ஓட்ட வேண்டும். இதுதான் டாஸ்க். நிரூப்பும் ஜூலியும் ஏற்கெனவே ஆடி முடித்திருக்க இதர நால்வர் மட்டும் தொடர்ந்து ஓட்டிக் கொண்டிருந்தார்கள்.
“தமிழ்ல எனக்குப் பிடிக்காத வார்த்தை – நடிப்பு” – தாமரை ஆவேசம்
ரம்யாவிற்கும் தாமரைக்கும் வந்த நாளில் இருந்தே ஆகவில்லை. எனவே அந்தப் புகைச்சல் இந்த டாஸ்க்கிலும் பிரதிபலித்தது. ‘உடம்பு வலிக்குது’ என்று அனத்தினாலும் தொடர்ந்து சைக்கிள் மிதித்த தாமரையை “நல்லா நடிக்கறீங்க…” என்று விளையாட்டும் சீரியஸூம் கலந்து கிண்டல் செய்தார் ரம்யா. பின்பாட்டிற்கு அபிராமியும் இணைந்து கொண்டார். “உங்களைச் சிறந்த நடிகைன்னு சொல்றது பெருமைதானே… அதுதானே உங்க தொழில். அதுக்கு ஏன் கோபம் கொள்ள வேண்டும்?” என்று கடந்த சீசனிலேயே கமல் இதை பாசிட்டிவ்வாக அணுகக் கற்றுத் தந்திருந்தாலும் ‘நடிப்பு’ என்று யாராவது சொல்லிவிட்டால் கொலைவெறி கொள்ளும் பழக்கத்தை தாமரையால் நிறுத்த முடியவில்லை. ‘நான் கடுப்பாயிடுவேன்…’ என்று தாமரை டெரர் முகத்தைக் காட்ட “ஆகிக்கோங்க” என்று அலட்சியமாக சொல்லி அந்தத் தீயில் பெட்ரோலை ஜாலியாக ஊற்றினார் ரம்யா. இதனால் டென்ஷன் ஆன தாமரை, டாஸ்க்கை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.
“நான் வலிக்குதுன்னு சொன்னது நடிப்பா… நான் புலம்பத்தான் செய்வேன். கடுப்பு ஆனா… ஆகிக்கோன்னு சொல்றது… ஏத்தம்தானே… அப்படியெல்லாம் நடிச்சு மொண்ணைத்தனமா வாழணும்னு எனக்கு அவசியம் கிடையாது” என்று டிசைன் டிசைனாக தாமரை அனத்திக் கொண்டிருந்த போது பக்கத்திலிருந்த நிரூப் சற்று சும்மாவாது இருந்திருக்கலாம். “அவ சைடுல இருந்து யோசிக்கும் போது…” என்று ரம்யாவை ஆதரித்துப் பேச தாமரையின் உக்கிரம் இன்னமும் உச்சத்திற்குச் சென்றது. “அப்புறம் நான் பொல்லா கோபக்காரியாயிடுவேன் பார்த்துக்க. வாயில என்ன வரும்ன்னே தெரியாது” என்று விழிகளை உருட்டினாலும் நிரூப் அடங்குவதாக இல்லை.
சைக்கிள் டாஸ்க்கில் பாலாவும் ரம்யாவும் மட்டும் கடைசியில் ஓட்டிக் கொண்டிருந்தார்கள். ஆறு மணி நேரத்தையும் கடந்து இந்த சைக்கிள் விளையாட்டு போய்க் கொண்டிருந்தது. “என்னால முடியல… அக்காவோட இந்தச் சாதனையைப் பாராட்டி கைத்தட்டினீங்கன்னா நான் இறங்கிடுவேன்” என்று ரணகளத்திலும் கிளுகிளுப்பாக ரம்யா கேட்க, நிரூப்பும் ஜூலியும் அக்காவைப் பாராட்டி நாலு வார்த்தைகள் சொல்லி இறக்கிவிட்டார்கள். ஆக இந்த டாஸ்க்கில் பாலா வெற்றி. ஆனால் அவர் யாருக்காக ஆறு மணி நேரத்திற்கும் மேலாக சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தார் தெரியுமா? அது ஜூலிக்காக. ‘வெல்லம் தின்றவன் ஒருத்தன். விரல் சூப்பறவன் ஒருத்தன்’ என்கிற கதையாக, பாலாவின் உழைப்பின் பலன் ஜூலிக்குச் சென்றது. ரம்யா சைக்கிள் ஓட்டியது பாலாவிற்காக. ‘சிங்கப் பெண்ணே’ பாடலை டைமிங்காக பாடி கிண்டல் செய்தார் நிரூப்.
துவங்கியது ரணகளமான வட்டமேஜை மாநாடு
62-ம் நாள் விடிந்தது. ரஹ்மானின் அட்டகாசமான இசை மற்றும் குரலில் ‘இரும்பிலே ஒரு இதயம் முளைக்குதோ’ பாடலை ஒலிக்க விட்டார் பிக் பாஸ். இதன் கடைசி வரி முடிவதற்குள் அடுத்த டாஸ்க் திடீரென காட்டப்பட்டது. இதுவும் பாதிலியிருந்துதான் காட்டப்பட்டது. (மனச்சாட்சியே இல்லையா பிக் பாஸ்?!). போட்டியாளர்கள் அனைவரும் வட்டமேஜை மாநாடு நடத்தி, தங்களுக்குள் விவாதித்து இறுதியில் வாக்கெடுப்பு நடத்தி ஒருவரை வெளியேற்ற வேண்டும். ஒவ்வொரு சுற்றிலும் தாக்குப் பிடித்து இறுதிவரை இருப்பவர் வெற்றியாளர்.
வாக்குவாதம் ஆரம்பித்தது. ஜூலியை டார்கெட் செய்து பேச ஆரம்பித்தார் பாலா. “சூட்கேஸ் பணத்தை எடுக்க ரெடியா இருந்தீங்க. அப்படின்னா ஃபைனல் போக விருப்பமில்லைன்னுதானே அர்த்தம்?” என்பது போல் கேட்டு பாலா மடக்க முயல “ரன்னர் அப்-ஆ வர்றவங்களுக்கு பரிசு எதுவும் கிடைக்காது. ‘முன்னமே சூட்கேஸிற்கு மோதியிருக்கலாமோன்னு அப்ப எனக்கு கில்ட்டியா தோணக்கூடாது. அதுக்காகத்தான் சுருதியோட போட்டி போட்டு ஒரு முயற்சி செஞ்சேன்’ என்று ஜூலி தந்த கவுன்ட்டர் வாதம் சிறப்பு. “சுருதி கூட மோதி சோர்வா வந்து படுத்திருக்கேன். நீங்க என்னை வந்து ஆதரவா ஒரு வார்த்தை கூட விசாரிக்கலை” என்று தாமரையிடம் தெரிந்த ‘மாற்றத்தை’ப் பற்றி ஜுலி புகார் சொல்ல “அப்ப நான் வேற பிரச்னைல இருந்திருப்பேன்” என்று சமாளித்தார் தாமரை.
என்றாலும் வாக்குவாதத்தின் இறுதியில் தாமரைக்கு அதிக வாக்குகள் கிடைக்க அவர் வெளியேற வேண்டியிருந்தது. சேரை எதிர் திசையில் திருப்பிப் போட்டு, கண்கலங்கி, அவ்வப்போது கண்ணீரை துடைத்துக் கொண்டு கோபித்துக் கொண்ட மாமியார் மாதிரி அமர்ந்திருந்தார் தாமரை. மீதமிருந்தவர்களுக்குள் வாதம் தொடர்ந்தது. அடுத்ததாக ரம்யாவை டார்கெட் செய்ய முயன்றார் பாலா. ஆனால் அது அத்தனை எளிதாக இல்லை. “ரேங்க்கிங் டாஸ்க்ல ஜூலி ஒண்ணாம் நம்பர் வந்ததற்கு நீங்கதான் காரணம். ஆனா வக்கீல் டாஸ்க்ல சிறப்பா பேசினாங்கன்னு அபிராமியை ஆதரிச்சீங்க. இதில் எந்த ரம்யா உண்மை?” என்று பாலா கேள்வியை எழுப்ப “ரேங்க்கிங் டாஸ்க் ரொம்ப குழந்தைத்தனமா போச்சு. எப்படா முடிப்போம்னு ஆயிடுச்சு” என்று ரம்யா சொன்ன பதில் உண்மையானதுதான். பிக் பாஸின் அறிவிப்பிற்குப் பிறகு அதை விரைவில் முடிப்பதற்கான மெனக்கெடலை ரம்யாதான் அதிகம் செய்தார்.
ரம்யாவை டார்கெட் செய்ய முயன்று தோற்ற பாலா
“மாத்தி மாத்தி வோட்டு போட்டீங்களே?” என்று பாலா மறுபடியும் கேட்க “அது என் உத்தி. ஏன், உங்களுக்குத்தான் இதெல்லாம் வருமா?” என்று ரம்யா பதில் சொல்ல, “அப்ப உங்க சுயநலத்துல வாக்களிச்சீங்க. இது சரியா? ஜூலி மேல இவ்வளவு குறை சொல்றீங்க. ஆனா அவங்களுக்கு ஒண்ணாம் நம்பர் கொடுத்தீங்க… உங்களால மத்தவங்க பாதிக்கப்பட்டாங்க” என்று குற்றம் சாட்டினார் பாலா. இதில் ‘மத்தவங்க’ என்பது வேறு யாருமல்ல. பாலாவேதான். இவர்களின் வாக்குவாதம் நீண்டு கொண்டே போகவே ஓரமாக அமர்ந்திருந்த தாமரை ஒரு கட்டத்தில் தூங்கியே விட்டார். (என் இனமடா நீ!).
“விசு படத்துல வர்றா மாதிரி வசனம் பேசிட்டே இருக்காதீங்க. ஒருத்தரை வெளியே அனுப்புங்க” என்று பஸ்ஸர் அடித்து எச்சரித்தார் பிக் பாஸ். பாலாவிற்கு வாக்களித்தார் அபிராமி. “பாயிண்ட் சரியா ஞாபகம் இருந்தா மட்டும் பேசுங்க” என்று அபிராமியை கோபித்துக் கொண்டார் பாலா. ஜூலியின் மோதிரம் தொடர்பாக ஏதோ கேட்டதிற்கு பாலா பயங்கரமாக கோபம் அடைந்ததை மீண்டும் நினைவுப்படுத்தினார் அபிராமி. இறுதியில் பாலாவிற்கு எதிராக பல வாக்குகள் வந்து விழ அவர் வெளியேற வேண்டியிருந்தது. “சுருதி ஜெயிக்கக்கூடாதுன்னு நான் நெனக்கலை” என்று விளக்கம் தந்தார் அபிராமி. ஒரு பிரேக் விடப்பட்டது.
வீட்டினுள் அழுகையும் சோகமுமாக அமர்ந்திருந்த தாமரையை விதம் விதமாக சமாதானப்படுத்தினார் பாலா. “பாசம் காட்டலைன்னா நடிப்புன்றாங்க. அப்ப ஜூலி பண்றதும் நடிப்புதானே?” என்று அனத்தினார் தாமரை. இன்னொரு பக்கம் இதே விஷயத்தை வைத்து அபிராமியிடம் அனத்திக் கொண்டிருந்தார் ஜூலி. “மத்தவங்களை மட்டும் நடிப்புன்னு சொல்றாங்க. அது ஓகேவா… தனக்கு வந்தா மட்டும்தான் ரத்தமா?” என்று புலம்பிய ஜூலிக்கு ஆறுதல் சொன்னார் அபிராமி.
நிரூப் – அனிதாவிற்கு முன்பு; அனிதாவிற்குப் பின்பு
பிரேக் முடிந்ததும் மீண்டும் வட்டமேஜை மாநாட்டிற்கு கூடினார்கள். ஆடை மாற்றிக் கொண்டு ஃபிரெஷ்ஷாக வந்திருந்தார்கள். நிரூப்பின் மீது வாக்களித்து டாஸ்க்கை சுடச்சுட துவக்கினார் ஜூலி. “பேச வேண்டிய நேரத்துல பேசறதில்ல. நடிக்கறாரு” என்று ஜூலி புகார் சொல்ல “மக்கள் பார்த்துட்டு இருக்காங்க. நான் எதுக்கு ரிப்பீட் மோட்ல விளக்கம் சொல்லணும்?” என்று அதே பாட்டைப் பாடினார் நிரூப்.
இது அபத்தமான வாதம். மக்கள் இதையெல்லாமா தொடர்ந்து நினைவு வைத்துக் கொள்வார்கள்? தன் தரப்பு நியாயத்தை அவசியப்படும் போதெல்லாம் பதிவு செய்வதுதான் சரியானது. “சிங்கத்தை தட்டியெழுப்புகிற அளவுக்கு இங்க சம்பவம் எதுவும் நடக்கலை. அதான் நான் பேசலை” என்று நிரூப் கெத்தாக சமாளித்ததைக் கண்டு மற்றவர்கள் சிரித்துவிட்டார்கள். “நிரூப் மேல பொறாமை–ன்ற விஷயத்துக்கு நீ ஏன் கடைசி வரைக்கும் விளக்கம் சொல்லல?” என்று அபிராமி மடக்க முயல, “அது அனிதாவோட மைண்ட் வாய்ஸ். அது தேவையில்லாத ஆணி-ன்னு பாலா, அனிதா ரெண்டு பேர் கிட்டயும் சொல்லிட்டேன். அப்பவும் அனிதாதான் மறுபடி மறுபடி சொல்லிட்டே இருந்தா” என்று தன் தரப்பைத் திறமையாக சமாளித்தார் நிரூப்.
“அ.மு., அ.பி., ன்ற மாதிரி அனிதாவிற்கு முன்பு, அனிதாவிற்கு பின்பு–ன்னு நிரூப்பை ரெண்டு விதமா பிரிச்சுடலாம். இப்பத்தான் பேச ஆரம்பிச்சிருக்கான். இதுக்கு முன்னாடி அனிதாதான் அவனோட மவுத்பீஸா இருந்தாங்க” என்று அபிராமி குற்றம் சாட்டினார். பிறகு கார் டாஸ்க்கில் ‘ஜூலி தாமரைக்கு வாக்களிக்கவில்லை’ என்கிற காரணத்தை வைத்து அவரை கார்னர் செய்ய, ஜூலிக்கு 2 ஓட்டும், நிரூப்பிற்கு 2 ஓட்டும் வந்தன. “நான் ஜூலிக்கு எதிராக வாக்களிக்க மாட்டேன்” என்று இந்தச் சமயத்தில் வெளிப்படையாக அபிராமி சொன்னது முறையானதல்ல. “டாஸ்க்கில் எங்கள் நட்பைக் கொண்டு வர மாட்டேன்” என்று சொன்னவர் இதே அபிராமிதான். ஆனால் இங்கு ஒரு ப்ளோவில் வார்த்தையை விட்டுவிட்டார். “கூட்டுக்களவாணிங்க” என்று அபிராமி மற்றும் ஜூலியை ஜாலியாக குற்றம் சாட்டினார் நிரூப். “யார் வெளியே போறது?” என்று பிக் பாஸ் நெருக்கடி தர “நானே போய் தொலையறேன். டாஸ்க் நகரணுமே… என்ன பண்றது?” என்கிற சலிப்புடன் எழுந்து சென்றார் ஜூலி.
பிக் பாஸ் வீடே ஒரு ‘கோழி – கழுகு டாஸ்க்தான்’
வீட்டிற்குள் வந்த ஜூலியிடம் “நிரூப் மேல அவ்வளவு குறையை வெச்சுக்கிட்டு என்னை ஏன் முதல்ல அனுப்பிச்சீங்க?” என்று கேட்டு மேலும் இம்சையைக் கூட்டினார் பாலா. அபிராமி, நிரூப் மற்றும் ரம்யா ஆகிய மூவர் களத்தில் இருந்தார்கள். அபிராமியை டார்கெட் செய்ய துவங்கினார் நிரூப். “பாலாவை சார்ந்து இருந்தாங்க. சிம்பு சுட்டிக் காட்டியவுடன் கட் பண்ணிட்டாங்க” என்று நிரூப் சொல்ல, “அதை விட்டா உனக்கு சொந்தமா காரணமே தெரியாதா?” என்று சலித்துக் கொண்டார் அபிராமி. “இந்த வீடே ஒரு கோழி – கழுகு டாஸ்க்தான். பலவீனமான கோழியை கழுகு கொத்திடும்” என்று நிரூப் சொன்ன தத்துவம் அருமை. “பாலா பின்னாடியே சுத்திட்டு இருந்த” என்று ஒரு ப்ளோவில் நிரூப் சொன்னதை வன்மையாக கண்டித்தார் அபிராமி. “பிரெண்ட்ஷிப்பை நான் குழப்பிக்கறதில்லை. வனிதாக்கா கூட என் பிரெண்டுதான். டீத்தூளை அவங்க ஒளிச்சு வெச்சப்ப நான்தான் போய் தட்டிக் கேட்டேன்” என்று பழைய காலத்திலிருந்து சாட்சியம் தேடினார் அபிராமி.
“ரம்யா… நீங்க என்ன சொல்றீங்க?” என்று கேட்டார் நிரூப். இப்போது ரம்யாவும் அபிராமிக்கு எதிராக வாக்களித்தால்தான் டாஸ்க் முன்னகரும். “நீங்க டாஸ்க்ல சின்சியரா இருக்கீங்க. ஆனா சிலர் கூட வெச்சிருக்கிற நட்பு, சார்ந்திருந்தல் போன்றவை டாஸ்க்கில் எதிரொலிக்கும். தனித்துவம் இல்லாதது, நடிப்பு ஆகிய இரண்டு காரணங்களைச் சொல்லி உங்களுக்கு வோட் பண்றேன்” என்றார் ரம்யா. “நான் எமோஷனல் பொண்ணுதான். ஆனா நடிக்கலை” என்றபடி எழுந்து சென்றார் அபிராமி.
ஆக இந்த டாஸ்க்கில், களத்தில் மீதமிருந்தவர்கள் நிரூப் மற்றும் ரம்யா. இதில் யார் ஜெயிப்பார்கள்? வழக்கம் போல் பிக் பாஸ் இதை மெயின் எபிசோடில் காட்ட மாட்டார். நாம்தான் தேடிப் பார்க்க வேண்டும். அதேபோல், இந்த வார எலிமினேஷனில் அபிராமி வெளியேறிய நிலையில் இறுதி வரிசையில் நிற்கப் போகிறவர்கள் யார்… யார்?