RRR படத்தின் இடைவேளையில் நீரும் நெருப்புமாக, ரத்தத்தோடும் ரணத்தோடும் ரௌத்திரத்தோடும் முட்டி மோதிய ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரணைப் போன்று உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அலிஷா ஹீலியும் நட் சீவரும் ஒரு தீவிரமான யுத்தத்தை நிகழ்த்தி முடித்திருக்கின்றனர்.
பெண்கள் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று மோதியிருந்தன. இந்தப் போட்டியை ஆஸ்திரேலியா 71 ரன்கள் வித்தியாசத்தில் வென்று உலகக்கோப்பையை 7வது முறையாக தட்டித் தூக்கியிருக்கிறது.
இந்தப் போட்டியை ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடந்த போட்டி என்பதை விட ஆஸ்திரேலியாவின் அலிஷா ஹீலி மற்றும் இங்கிலாந்தின் நட் சீவருக்கு இடையே நடந்த போட்டி என்றே சொல்லலாம்.
ஆஸ்திரேலிய அணியே முதலில் பேட் செய்திருந்தது. 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 356 ரன்களை எடுத்திருந்தது. இந்த டார்கெட்டே இங்கிலாந்தைச் சோர்வடைய வைத்துவிட்டது. ஆஸ்திரேலியா பேட்டிங்கை முடிக்கும்போதே ஏறக்குறைய போட்டியின் முடிவு தெரிந்துவிட்டது.
ஆஸ்திரேலியா இந்தளவிற்கு ஸ்கோர் செய்ய காரணமாக இருந்தவர் அலிஷா ஹீலி. 138 பந்துகளில் 170 ரன்களை அடித்திருந்தார். ஓர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், அதாவது ஆண்கள் உலகக்கோப்பை உட்பட எதிலுமே ஒரு தனிப்பட்ட பேட்டர் இவ்வளவு ரன்னை எடுத்ததே இல்லை.
முதலில் ஹீலி கொஞ்சம் சாந்தமாகத்தான் தொடங்கியிருந்தார். ரேச்சல் ஹேனஸ் – ஹீலி இந்தக் கூட்டணி நன்கு செட்டில் ஆகி நின்றுவிட்டு, பின்பு வெளுக்க வேண்டும் என்கிற எண்ணத்துடனே ஆடியது. பவர்ப்ளேயான முதல் 10 ஓவர்களில் 37 ரன்களை மட்டுமே எடுத்திருந்தனர். இந்த பவர்ப்ளே முடிந்தபிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக கியரை மாற்றி பீஸ்ட் மோடுக்கு மாறினர். அரைசதத்தை அடிக்க அலிஷா ஹீலி 62 பந்துகளை எடுத்துக்கொண்டார். அரைசதத்திலிருந்து சதத்தை எட்ட அவருக்கு 38 பந்துகள் மட்டுமே தேவைப்பட்டன. அரைசதத்தை கடந்த பிறகு ஏறக்குறைய ஓவருக்கு ஒரு பவுண்டரி என்ற ரீதியில் அடித்தவர் நன்றாக ஸ்ட்ரைக்கையும் ரொட்டேட் செய்தார். அடுத்ததாக கடைசி 38 பந்துகளில் 70 ரன்களை அடித்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் கிட்டத்தட்ட 200 ஐ நெருங்கியிருந்தது.
43, 44, 45 சீவர், எக்கல்ஸ்டன், கேட் க்ராஸ் வீசிய இந்த 3 மூவர்களில் மட்டும் 8 பவுண்டரிகளை அடித்திருந்தார். தொடக்கத்தில் பௌலர்களின் தலைக்கு மேல் பவுண்டரிகளை பறக்கவிட்ட ஹீலி கடைசிக்கட்டங்களில் லாகவமாக ஃபைன் லெக்கைக் குறிவைத்து பின்னியெடுத்தார்.
ரௌத்திரம் பொங்க அலிஷா ஹீலி ஆடிய இந்த ஆட்டம் 46 வது ஓவரில் முடிந்தது. ஷ்ரப்சோலின் பந்தில் ஸ்டம்பிங் ஆகி வெளியேறினார். நாக் அவுட், ஃபைனல்ஸ் என்றாலே அலிஷா ஹீலி வேற லெவல் இன்னிங்ஸ்களை ஆடிவிடுவார். இந்த உலகக்கோப்பையிலேயே லீக் சுற்றில் 7 போட்டிகளில் ஹீலி அடித்திருந்த ஸ்கோர் 210. அரையிறுதி மட்டும் இறுதிப்போட்டி இரண்டிலும் மட்டும் 299 ரன்களை அடித்திருந்தார். கடைசியாக 2020 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியிலுமே ஹீலிதான் Player of the match!
ஆஸ்திரேலியா பேட்டிங் ஆடி முடித்த போதே ஆட்டம் முடிந்துவிட்டதுதான். ஆனால், அதற்காக போராடாமல் இருக்க முடியுமா? ஆஸியை எதிர்த்து போராட இங்கிலாந்தை விட நட் சீவருக்கு அதிக காரணங்கள் இருந்தன.
ஆஸ்திரேலியா இந்தளவுக்கு ஸ்கோர் செய்ய காரணமாக இருந்த அலிஷா ஹீலி 41 ரன்களில் இருக்கும்போதே மிட்விக்கெட்டில் ஒரு கேட்ச்சை கொடுத்தார். அதை நட் சீவர்தான் ட்ராப் செய்திருந்தார்.
அங்கே இருந்துதான் அலிஷா ஹீலியின் இன்னிங்ஸ் அடுத்தக்கட்டத்திற்கு வேகம் பிடித்தது. ஆக, ஹீலியின் கேட்ச் ட்ராப் கொடுத்த ரணத்திற்கு வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு நட் சீவருக்கு இருந்தது.
நெருப்பாக அனல் தெறித்த அலிஷா ஹீலியின் இன்னிங்ஸுக்கு பதிலடியாகக் காட்டாற்று வெள்ளமாக நட் சீவர் கரைகளை உடைத்துக் கொண்டு பாய்ந்தார். அலிஷா ஹீலிக்கு சக ஆஸ்திரேலிய பேட்டர்களிடமிருந்து கிடைத்த ஒத்துழைப்பு நட் சீவருக்கு இங்கிலாந்து பேட்டர்களிடமிருந்து கிடைக்கவில்லை. ஆனால், அதெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டாகவே இல்லை. அவருடைய ரௌத்திரமே அவருக்குத் துணையாக இருந்தது.
121 பந்துகளில் 148 ரன்களை எடுத்திருந்தார். ஒரு முனையில் விக்கெட் விழவிழ இன்னொரு முனையில் நட் சீவரின் போராட்டம் வலுவாகிக் கொண்டே போனது.
9வது விக்கெட்டிற்கு டீனுடன் சேர்ந்து மட்டுமே 65 ரன்களை எடுத்திருந்தார். டீன் ஒத்துழைத்ததை போல இன்னும் இரண்டு மூன்று பேட்டர்கள் ஹீலிக்கு ஒத்துழைத்திருந்தால் போட்டியின் முடிவே மாறியிருக்கும். ஏனெனில், சீவர் அடித்த அடியில் இங்கிலாந்துக்கு ரன்ரேட் ஒரு பிரச்னையாகவே இல்லை. அடுத்தடுத்து வீழ்ந்த விக்கெட்டுகள்தான் பிரச்னையாக மாறின. ஆஸ்திரேலிய பௌலர்கள் இங்கிலாந்தின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திவிட்டார்கள். ஒட்டுமொத்த அணியும் சுருண்டுவிட்டது. நட் சீவர் மட்டும் நாட் அவுட்! அவர் போராட தயாராக இருந்தார். அதற்கு ஒத்துழைக்க யாருமில்லை.
இந்தப் போட்டி என்றில்லை, லீக் சுற்றிலுமே ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும்தான் முதல் போட்டியில் மோதியிருந்தது. அந்தப் போட்டியிலும் இங்கிலாந்து தோற்றிருந்தது. நட் சீவர் மட்டும் கடைசி வரை போராடியிருந்தார். சதமடித்தார். நாட் அவுட்டாக இருந்தார். இங்கிலாந்தின் மற்ற பேட்டர்களை எளிதாக வீழ்த்திய ஆஸ்திரேலிய பௌலர்களால் நட் சீவரை வீழ்த்த முடியவில்லை. காட்டாற்று வெள்ளத்திற்கு அணைகள் ஏது?
இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் வெற்றி இங்கிலாந்தின் தோல்வியைத் தாண்டி இந்த இரண்டு வீராங்கனைகளின் இன்னிங்ஸ்கள் பெரிதாகப் பேசப்பட்டு வருகின்றன. பெண்கள் கிரிக்கெட்டின் இரண்டு மகத்தான இன்னிங்ஸ்கள் ஒரே போட்டியில் அதுவும் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆடப்பட்டிருப்பது ஒரு புது வரலாறாக பதிவாகியிருக்கிறது.
அலிஷா ஹீலி Player of the match விருதை வென்றார். Player of tournament-ம் அவருக்கே! விருதுகள் ஹீலியை அலங்கரித்தாலும் சீவரின் போராட்டத்திற்கும் பெண்கள் கிரிக்கெட்டின் வரலாற்றில் முக்கிய இடமுண்டு.