டாடா குழுமத்தின் சூப்பர் செயலியான Tata Neu ஏப்ரல் 7 ஆம் தேதி அறிமுகமாகவுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை கூகுள் பிளே ஸ்டோரில் டீசர் இமேஜ் மூலம் வெளியிட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 போட்டியுடன் முதன்முறையாக சூப்பர் செயலியையும் விளம்பரப்படுத்த தொடங்கியுள்ளது. இருப்பினும், தற்போது வரை இந்த செயலியை டாடா குழும ஊழியர்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Tata Neu என்றால் என்ன?
Tata Neu என்பது அதன் அனைத்து டிஜிட்டல் சேவைகள் மற்றும் பயன்பாடுகளை ஒரே தளத்தில் ஒன்றிணைக்கும் குழுமத்தின் சூப்பர் செயலி ஆகும். அதன் ப்ளே ஸ்டோர் பக்கத்தில், செயலி குறித்து கூறியிருப்பதாவது, ” அதிநவீன டிஜிட்டல் உள்ளடக்கத்தைப் பயன்படுத்துங்கள், பணம் செலுத்துங்கள், நிதிகளை நிர்வகியுங்கள், விடுமுறையைத் திட்டமிடுங்கள், போன்ற அனைத்து தேடல்களுக்கான பதிலை கண்டறியும் உலகமாக டாடா Neu திகழும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tata Neuஇல் வழங்கும் சேவைகள்?
ஏர் ஏசியா இந்தியா, ஏர் இந்தியா ஆகியவற்றில் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தல், தாஜ் குழுமத்தில் ஹோட்டல்களை முன்பதிவு செய்தல், பிக்பாஸ்கெட்டில் இருந்து மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்தல், 1mg இலிருந்து மருந்துகளை ஆர்டர் செய்தல், குரோமாவில் இருந்து எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் வெஸ்ட்சைடில் இருந்து ஆடைகள் வாங்குதல் போன்ற பல்வேறு Tata Group டிஜிட்டல் சேவைகளை இந்த சூப்பர் செயலியில் அணுக முடியும். இந்த செயலி வாயிலாக புக்கிங் செய்கையில், சம்பந்தப்பட்ட நபருக்கு வெகுமதியாக Neu Coins கிடைக்கும். அதனை அடுத்த சேவையின்போது உபயோகித்துக்கொள்ளலாம்.
இந்தியாவில் வேறு சூப்பர் ஆப்ஸ் உள்ளதா?
அமேசான், பேடிஎம், ரிலையன்ஸ் ஜியோ போன்ற பல இணைய நிறுவனங்களும் தங்களது சூப்பர் ஆப்ஸின் பதிப்புகளை உருவாக்கியுள்ளன. அவை பணம் செலுத்துதல்,ஷாப்பிங், பயண முன்பதிவு, மளிகை பொருட்கள் போன்ற பல சேவைகளை வழங்குகின்றன.
இந்திய நிறுவனங்கள் ஏன் சூப்பர் செயலிகளை உருவாக்குகின்றன?
மக்கள்தொகையில் பெரும்பாலானோர் டெஸ்க்டாப்-க்கு பதிலாக ஸ்மார்ட்போனை அதிகளவில் உபயோகிக்கும்போது, நிச்சயம் அந்த நாட்டில் அல்லது பிராந்தியத்தில் சூப்பர் செயலி உருவாகும். முதல் முறையாக இணையத்தை உபயோகிக்கும் பலரும் தங்கள் மொபைல் போன்களை பரிவர்த்தனைக்கு உபயோகிக்கும் சந்தையாக இந்தியா ஏற்கனவே மாறிவிட்டது. இந்திய நிறுவனங்கள் சூப்பர் செயலியை உருவாக்க விரும்புவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.
ஒரே இடத்தில் சேவைகளை ஒருங்கிணைப்பதன் மூலம் அதிக வருவாய் ஈட்டப்படுவதைத் தவிர, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நுகர்வோர் குறித்த அதிக டேட்டா கிடைக்கின்றன. அவை, நுகர்வோரின் தேவையை அறிய உதவியாக அமைந்திடும்.