புதுடெல்லி,
இந்தியாவின் தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம் 94 ஆண்டுகள் பழமையானது. இதை கட்டும்போது ரூ.83 லட்சம் செலவானது.
இந்த கட்டிடத்தை இடிக்காமல் அதனையொட்டி 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் புதிய நாடாளுமன்றம் முக்கோண வடிவில் கட்டப்பட உள்ளது.
இதற்காக ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றக் கட்டிடம், மத்திய தலைமை செயலகம் ஆகியவை கட்டப்பட உள்ளன.
இன்று ராஜ்யசபாவில், சென்ட்ரல் விஸ்டா மறுவடிவமைப்பு திட்டத்திற்கான மதிப்பிடப்பட்ட செலவு பற்றிய கேள்விக்கு, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை மந்திரி கவுஷல் கிஷோர் பதிலளித்தார்.
அவர் அளித்த பதிலில் தெரிவித்திருப்பதாவது;-
“2022-23 நிதியாண்டில், சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் மேம்பாட்டிற்காக மதிப்பிடப்பட்ட செலவு ரூ.2,285 கோடி ஆகும்.
சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் செலவு 29 சதவீதம் அதிகரித்துள்ளது என்ற தகவலை மறுக்கிறேன்.
இதுவரை இந்த திட்டத்திற்காக செய்யப்பட்ட செலவு ரூ.418.70 கோடி ஆகும்.
மறுவடிவமைக்கப்பட்ட சென்ட்ரல் விஸ்டா அவென்யூ திட்டத்தில், ராஷ்திரபதி பவனில் இருந்து இந்தியா கேட் வரை செல்லும் ராஜபாதையை உள்ளடக்கிய முதல் கட்ட பணிகள், இப்போது மே 2022க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.”
இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கேட்ட கேள்விக்கு பதிலளித்து கவுஷல் கிஷோர் இந்த தகவலை தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பாதி, மார்ச் 14ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி நிறைவடைகிறது.
சென்ட்ரல் விஸ்டா திட்ட பணிகளை மத்திய பாஜக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இந்த நடவடிக்கைக்கு பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.