பியாங்யாங்: எங்கள் மீது ராணுவ பலத்தை தென் கொரியா பயன்படுத்தினால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று எச்சரித்துள்ளார் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் சகோதரியும் அவரது கொள்கை ஆலோசகருமான கிம் ஜோ யாங். தன் மீது எத்தனை பொருளாதார தடைகள் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் ஆயுத சோதனைகளை வட கொரியா செய்து கொண்டே தான் இருக்கின்றது.
அந்த வகையில், கடந்த 2017க்குப் பின்னர் முதன் முறையாக சில நாட்களுக்கு முன் ஐசிபிஎம் எனப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை அதன் முழு தூரத்துக்கு ஏவி வட கொரியா சோதனை செய்தது.
இதனையடுத்து தென் கொரிய ராணுவத் தளபதி சூ வூக் கடந்த வெள்ளிக்கிழமையன்று முன்வைத்த விமர்சனத்தில், தென் கொரிய ராணுவத்திடம் ஏவுகணைகள் இருக்கின்றன. அவை வட கொரியாவின் எந்த ஒரு நகரத்தையும் துல்லியமாக தாக்கக் கூடியவை. வட கொரியா எங்களுக்கு எதிராக ஏவுகணையைப் பயனபடுத்தினால் நாங்களும் பயன்படுத்துவோம் எனக் கூறியது.
இதற்கு எதிர்வினையாற்றிய கிம் யோ ஜாங், ஒரு பைத்தியக்காரர் பெரும் பிழை செய்துள்ளார். அவர் சொல்வது போல் எங்கள் மீது ராணுவ பலத்தைப் பயன்படுத்தினால் நாங்கள் அணு ஆயுதங்களைப் படுத்தத் தயங்கமாட்டோம். நாங்கள் அணு ஆயுதங்களை வைத்திருப்பது தற்காப்புக்காகத் தான். ஆனால் தென் கொரியா சீண்டினால் நிச்சயமாக அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம். எதிரிகள் பேரழிவை சந்திப்பார். அவர்களுக்கு அது பெருந்துயராக அமையும் என்று எச்சரித்துள்ளார்.
மேலும், எங்கள் படை பலத்திற்கு முன்னால் தென் கொரியா ஒரு பொருட்டே அல்ல என்று கூறினார்.
ஒரு தாய் மக்களுக்குள் நடக்கும் மோதல்.. ஒரே மொழி, ஒரே இனத்தைக் கொண்ட இரு கொரிய நாடுகளுக்கு இடையே என்னதான் பிரச்சினை என்று வரலாற்றுப் பக்கங்களைத் தேடினால் இரண்டாம் உலகப் போரில் இருந்து கதை வருகிறது. அப்போது, ஒன்றுபட்ட கொரியாவை ஜப்பான் தனது காலனித்துவ ஆட்சியின் கீழ் வைத்திருந்தது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் சரணடைந்த பின்னர், 1945-ல் கொரியா விடுதலை பெற்றது.
கொரியா விடுதலை பெற்ற வேளையில் அதன் வட பகுதியில் சோவியத் நாடும், தென் பகுதியில் அமெரிக்காவும் ஆதிக்கத்தைச் செலுத்தின. இரு ஆதிக்க நாடுகள் இடையிலான பனிப்போர், கொரியாவில் பெரும் சண்டையாக வெடித்தது. ஐந்தே ஆண்டுகளில் மீண்டும் போரை சந்தித்தது ஒன்றுபட்ட கொரியா. 1950ல் தொடங்கிய கொரியப் போர் மூன்று வருடங்கள் நீடித்தது.
1953-ல் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் தொடர்ச்சியாக வட கொரியா மற்றும் தென் கொரியா என இரண்டு நாடுகள் உருவாகின. போர் நிறுத்தத்தின்போது எந்த அமைதி ஒப்பந்தமும் ஏற்படவில்லை. அப்போதிலிருந்தே இரு நாடுகள் இடையே பிரச்சினைகள் தொடர்ந்து வருகிறது. இன்றும் தென் கொரியாவில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கே அமெரிக்கப் படைகள் இருக்கின்றன. வட கொரியாவுக்கு அமெரிக்கா என்றாலே வெறுப்பு. அந்த வெறுப்பு தென் கொரியா மீதும் பாய்ந்து கொண்டிருக்கிறது.