சியோல்:”தென் கொரியா அவசரப்பட்டு எங்களிடம் வாலாட்டினால், அணு ஆயுதத்தை பயன்படுத்த வேண்டி இருக்கும்,” என, வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 2017க்குப் பின், பெரிய அளவில் ஆயுத சோதனைகளில் ஈடுபடாமல் இருந்த வட கொரியா, கடந்த மாதம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை, சோதித்தது. இது, அண்டை நாடான தென் கொரியாவுக்கு, கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், தென் கொரிய ராணுவ தலைமை தளபதி சூ வூக் சமீபத்தில் பேசுகையில், ‘வட கொரியா ஏவுகணை தாக்குதல் நடத்த முயன்றால், அந்நாட்டின் எந்தப் பகுதி மீதும் துல்லிய தாக்குதல் நடத்தும் திறன் உள்ள ஏவுகணை, தென் கொரியாவிடம் உள்ளது’ என்றார்.இதற்கு, வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரியும், முதன்மை கொள்கை ஆலோசகருமான கிம் யோ ஜாங் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது:தென் கொரிய ராணுவ தளபதி சூ வூக், எங்கள் மீது ஏவுகணை வீசுவோம் என அவசரப்பட்டு கூறி, மிகப்பெரிய முட்டாள்தனத்தை செய்துஉள்ளார். எங்கள் மீது ஆயுத தாக்குதல் நடத்த நினைப்போர் மீது, உடனடியாக தாக்குதல் நடத்தி, அவர்களை முற்றிலுமாக அழிப்பதே, எங்கள் அணு ஆயுத படைக்கு அளிக்கப்பட்டுள்ள உத்தரவு.
எனவே, தென் கொரியா அவசரப்பட்டு வாலாட்டினால், அணு ஆயுதத்தை பயன்படுத்துவதை தவிர வேறு வழியில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement