புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தன்மை குறித்து எழுப்பப்பட்ட பல்வேறு வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. கடந்த முறை இது விசாரணைக்கு வந்தபோது, ‘முல்லைப் பெரியாறு அணையை தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் கொண்டு வர திட்டம் உள்ளதா?’ என ஒன்றிய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், நீதிபதி ஏ.எம்.கன்வீல்கர் அமர்வில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஐஸ்வர்யா பட்டி, ‘ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள தேசிய அணைகள் பாதுகாப்பு சட்டம் முழுமையாக அமலாக இன்னும் ஒரு வருடத்துக்கு குறையாமல் தாமதமாகும். இந்த விவகாரத்தில் இடைக்கால தீர்வை கொடுக்க வேண்டுமானாலும் ஒரு மாதமாவது தேவைப்படும்,’ என தெரிவித்தார். குறுக்கிட்ட நீதிபதி ஏ.எம்.கன்வீல்கர், ‘அப்படி என்றால் மேற்பார்வை குழுவை மேலும் வலுப்படுத்த வேண்டும்,’ என கூறினார். இதற்கு பதிலளித்த கூடுதல் சொலிசிட்டர் ஜஸ்வர்யா பட்டி, ‘முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கண்காணிப்பு குழுவில் வல்லுனர்களும் இடம்பெறும் வகையில் தமிழகம், கேரளா மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள், தலா ஒரு நபரை கூடுதலாக பரிந்துரைக்கலாம்,’ என யோசனை தெரிவித்தார். இதையடுத்து, வழக்கு வரும் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.