டெல்லி: அம்ருட் 1.0 திட்டம் அமலில் உள்ள மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்திற்கு அம்ருட் 2.0 திட்டத்தின் கீழ் மிகக்குறைவான நிதி ஒதுக்கப்பட்டு இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு வசதி கிடைப்பதை நோக்கமாக கொண்டு அம்ருட் என்ற அடல் புத்துணர்ச்சி மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான திட்டம் ஒன்றிய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் முதற்கட்ட பணிகளுக்காக தமிழ்நாட்டிற்கு 4756 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில்,அம்ருட் 2.0 திட்டத்திற்கு மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்திற்கு நிதி பெருமளவு குறைக்கப்பட்டது குறித்து மாநிலங்களவையில் திமுக எம்பி வில்சன் கேள்வி எழுப்பினார். தமிழகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டு இருப்பதாகவும் மாநிலங்களுக்கு இடையேயான பாரபட்சமான ஒதுக்கீடு குறித்து விளக்கம் அளிக்குமாறு அவர் வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில், இதற்கு எழுத்துப்பூர்வமாக ஒன்றிய அரசு அளித்துள்ள பதிலில், அம்ருட் திட்டங்களுக்கு நகர்ப்புற மக்கள் தொகைக்கு ஏற்றவாறு மாநிலங்களுக்கு 50:50 என்ற விகிதத்தில் ஒன்றிய அரசு ரூ.35.990 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததாகவும் தமிழகத்திற்கு ரூ.4,756 கோடி ஒதுக்கியதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால் அம்ருட் 2.0 திட்டத்திற்கு நகர்ப்புற மக்கள் தொகையில் 90:10 என்ற விகிதாச்சார விகிதத்தின் அடிப்படையில், ஒன்றிய அரசு ரூ.66,750 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அதில் தமிழ்நாட்டிற்கு ரூ.4,935 கோடி ஒதுக்கீடு செய்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தை காட்டிலும் நகர்ப்புற மக்கள் தொகை குறைவாக உள்ள மாநிலங்களுக்கு அம்ருத் 2.0 திட்டத்திற்கு அம்ருத் 1.0 திட்டத்தை விட 2 மடங்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ள இலையில், தமிழ்நாட்டிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பி வில்சன் குற்றம் சாட்டியுள்ளார்.தமது கேள்விக்கான ஒன்றிய அமைச்சரின் பதில் ஏற்கத்தக்கது அல்ல என்றும் வில்சன் கூறியுள்ளார்.