திருவள்ளூர் தனியார் மருத்துவமனை ஒன்றில் கழிவறைக்குள் சென்ற பெண் ஒருவர் அரைமணி நேரத்தில் குழந்தையை பெற்று போட்டு விட்டு தப்பிச்சென்ற நிலையில் குழந்தை உயிரிழந்தது.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே அத்திப்பேடு பகுதியில் எம் எம் ஆர் வீ. என்ற தனியார் மருத்துவமனை உள்ளது இந்த மருத்துவமனையில் கழிவறையில் தொப்புள் கொடியுடன் பெண் சிசு ஒன்று சடலமாக கிடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய சோழாவரம் போலீசார், மருத்துவமனையில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் ஆட்டோவில் ஒரு பெண் துணையுடன் வந்து இறங்கிய நிறைமாத கரப்பிணிப்பெண் ஒருவர் மருத்துவமனைக்குள் சென்று செவிலியருடன் பேசிவிட்டு கழிவறைக்குள் செல்லும் காட்சிகளும், சுமார் அரை மணி நேரம் கழித்து அந்தப்பெண் சாதாரணமாக நடந்து வந்து ஆட்டோவில் ஏறி செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தது.
ஆட்டோவின் நம்பரை வைத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்தப்பெண் பூண்டி பகுதியைச் சேர்ந்த சாஜாபானு என்கிற கீதா என்பது தெரியவந்தது.
பிரசவம் என்றாலே ஒவ்வொரு பெண்ணுக்கும் மறுபிறப்பு என்றும் சுகபிரசவம் என்பதை மறந்து அடிவயிற்றை கிழித்து அறுவை சிக்ச்சை செய்தும், ஆயுதம் போட்டும் தாயின் கர்ப்பபையில் இருந்து குழந்தையை தனியார் மருத்துவமனைகள் வெளியே எடுத்து வருகின்றன.
நவீன மருத்துவ உலகில் சில நேரங்களில் பிரசவத்தின் போது ஒரு சில பெண்கள் உயிரிழப்பதும் தொடர்கிறது. இந்த நிலையில் டேஞ்சரான டெலிவரி முறையை கையில் எடுத்த சாஜாபானுவோ, தபால்காரர் தபாலை வீட்டிற்குள் வீசி டெலிவரி செய்வதை போல விபரீதமான முறையில் பச்சிளம் பெண் குழந்தையை பெற்றெடுத்து தொப்புள் கொடியுடன் விட்டுச் சென்றதால் அந்த சிசு கழிவறையிலேயே உயிரிழந்ததாக கூறும் போலீசார்,சாஜாபானுவை கைது செய்து மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச்சென்றனர்.
ஏற்கனவே திருமணமான அந்தபெண் கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் வேறொருவருடன் தொடர்பு ஏற்பட்டு கர்ப்பமானதால் , தனக்கு புதிதாக பிறந்த குழந்தை அவமானமாக போய்விடும் என்று கருதி அதனை மறைப்பதற்காக மருத்துவமனைக்கு தனது தோழியின் துணையுடன் கடந்த 2ஆம் தேதி இரவு 10.50 மணிக்கு ஆட்டோவில் வந்து இறங்கி உள்ளார்.
அங்கிருந்த செவிலியரிடம் கழிவறைக்கு வழிகேட்டு அங்கு சென்ற அரைமணி நேரத்திற்கெல்லாம் சாஜா பானு இந்த விபரீத செயலில் ஈடுபட்டு தப்பியது தெரிய வந்தது. இதையடுத்து சாஜாபானுவை போலீசார் மருத்துவ பரிசோதணைக்காக அழைத்துச் சென்றனர்.
பெண் குழந்தை பெற்று வளர்க்க இயலாதவர்கள் அந்த குழந்தையை அரசின் தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்த்து விட்டிருக்கலாம். குழந்தையால் அவமானம் வந்து விடும் என்று எண்ணி பெற்ற தாயே விபரீத பிரசவத்தின் மூலம் பச்சிளம் பெண் சிசுவை உயிர் இழப்பிற்கு உள்ளாக்கியது வேதனைக்குரியது.