சென்னை: காவல்துறையின் உதவியை பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் உடனடியாகப் பெறும் வகையில், 60-க்கும் மேற்பட்ட சிறப்பம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள ‘காவல் உதவி’ செயலியின் பயன்பாட்டை முதல்வர்ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: காவல்துறையின் பணிகள் மேலும் சிறக்க, பல்வேறு திட்டங்களையும் தொழில்நுட்ப உத்திகளையும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் அவசர காலங்களில் காவல்துறையின் உதவியை உடனடியாகபெறும் வகையில், 60-க்கும் மேற்பட்ட சிறப்பம்சங்களுடன் ‘காவல் உதவி’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியின் செயல்பாட்டை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இந்த செயலியானது, இந்தியாவில் உள்ள மாநிலகாவல்துறையில் உருவாக்கப்பட்டுள்ள செயலிகளில் முதன்மையாக விளங்கும். ‘காவல் உதவி’ செயலியின் சிறப்பம்சங்கள் வருமாறு:
# பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் அவசர காலங்களில் சிவப்புநிற ‘அவசரம்’ என்ற பொத்தானை அழுத்துவதன் மூலம், பயனாளர் விவரம், தற்போதைய இருப்பிட விவரம் மற்றும் வீடியோ, கட்டுப்பாட்டறையில் பெறப்பட்டு காவல்துறையின் அவசர சேவை வழங்கப்படும்.
# பயனாளர்கள் கைபேசியில் நேரடி புகார்களை தெரிவிக்க,‘டயல் 100’ என்ற செயலி, காவல்உதவி செயலியுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணில் இருந்து அழைப்பதால், பயனாளர் விவரம் மற்றும் தற்போதைய இருப்பிட விவரம் அறியப்பட்டு துரித சேவை வழங்கப்படும்.
# பயனாளர்கள், குறிப்பாக மகளிர், சிறார்கள், முதியோர் ஆகியோர் அவசரகால புகார்களை படங்கள், குறுகிய அளவிலான வீடியோவை பதிவேற்றம் செய்து பதிவு செய்யலாம்.
# பயணங்கள் மேற்கொள்ளும்போது அவசர காலத்தில் பயனாளிகள், வாட்ஸ்அப் அல்லதுகூகுள் மேப் வாயிலாக நேரடி இருப்பிட விவரங்களை நண்பர்அல்லது உறவினருடன் பரிமாறும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பயனாளிகளின் உறவினர் அல்லது நண்பர்வாயிலாக செல்லும் இருப்பிடம் அறியப்பட்டு, காவலர் விரைந்துசெல்ல வழிவகை செய்யப்பட் டுள்ளது.
மேலும், காவல்நிலைய இருப்பிடம், நேரடி அழைப்பு வசதி, காவல்கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி விவரம் அறிதல், இணைய வழிபொருளாதார குற்றம் தொடர்பான புகார்கள், அவசர கால அறிவிப்புகள், இதர தகவல்கள் அறியும் வசதி,வாகன விவரம் அறிதல், போக்குவரத்து விதிமீறல் அபராதம் செலுத்தும் வசதி, தனிநபர் குறித்த சரிபார்ப்புசேவை, தொலைந்த ஆவணங்கள் குறித்த புகார், சிஎஸ்ஆர், முதல் தகவல் அறிக்கை குறித்த விவரம், காவல்துறையின் சமூக ஊடகசேவைகள், குடிமக்கள் சேவைசெயலி, 112 இந்தியா செயலி ஆகியவசதிகளையும் இதன்மூலம் பொதுமக்கள் பெற்று பயன்பெறலாம். இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யலாம்.
இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலர் வெ.இறையன்பு, உள்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர், டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.