சென்னை: ஆவணம், வாகனம், சான்றிதழ்கள் காணாமல் போனால் அதுகுறித்து தடையில்லா சான்றிதழ் வழங்க காவல்துறை புதிய நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது.
கொலை, கொள்ளை உள்ளிட்ட அனைத்து வகையான குற்ற நிகழ்வுகளின் எண்ணிக்கை, கடந்த கால விபரம் உட்பட அனைத்து விதமான தகவல்களும் குற்ற ஆவண காப்பகத்தில் போலீஸார் பட்டியலிட்டு வைத்திருப்பது வழக்கம். மேலும், விபத்துகள், விதி மீறல்கள் தொடர்பான தகவல்கள், ரவுடிகள், குற்றவாளிகளின் விபரங்களும் புகைப்படத்துடன் சேகரித்துவைக்கப்பட்டிருக்கும். அதேபோல், பாதுகாப்புக்காக உரிமம்பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்களின் விவரங்களும் அங்கு இருக்கும்.
இதுமட்டுமின்றி, சொத்து ஆவணங்கள் காணாமல் போனால், அதுதொடர்பாக தடையில்லா சான்று வழங்கும் பொறுப்பும் இந்த பிரிவு போலீஸாருக்கு உள்ளது.
இதற்கிடையே, அண்மைக் காலமாக பலர், ஆவணங்கள் காணாமல்போகாத நிலையில் அல்லது பிறரின் சொத்துகளை அபகரிக்கும் நோக்கத்தில், சென்னை குற்ற ஆவணக் காப்பக போலீஸாரிடம் விண்ணப்பித்து, தடையில்லா சான்று பெற முயற்சிப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இத்தகைய மோசடிகளை முற்றிலும் தடுக்க சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, காணாமல் போன ஆவணங்கள் தொடர்பான புகார்கள் மீதான விசாரணைக்கான புதிய வழிகாட்டுதல்களை சென்னை குற்ற ஆவண காப்பக போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, ஆவணம், வாகனம்,சான்றிதழ்கள் காணாமல் போனதாக குறிப்பிட்டு, அதை புதிதாக பெறுவதற்காக தடையில்லா சான்று பெற விண்ணப்பித்தால், புகார் அளித்தவர் கூறுவது உண்மையா? என குற்ற ஆவண காப்பக போலீஸார் விசாரணை மேற்கொள்வார்கள்.
குறிப்பாக புகார்தாரர் ஆவணங்களைத் தவற விட்டதாக குறிப்பிடப்பட்ட இடத்துக்கு அப்பகுதி காவல் நிலைய போலீஸாருடன் சென்று, அங்குள்ள கண்காணிப்பு கேமராக் காட்சிகளை ஆராய்வார்கள். அதைத் தொடர்ந்து, தவற விட்டவரின் செல்போன் எண்ணைப் பெற்று, சம்பவத்தன்று சம்பவ இடத்தில் அவர் இருந்தாரா? அல்லது வேறு எங்காவது இருந்தாரா? என்பதை சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் செல்போன் டவர் லோக்கேஷன் எடுப்பார்கள்.
மேலும், ஆவணம் தொலைந்து போன புகாரை உறுதிப்படுத்தும் வகையில் குறைந்தபட்சம் 3 சாட்சிகளின் வாக்குமூலம் பெறப்படும். இவைகளில் ஏதேனும் முரண்பாடு இருந்தால், அதுகுறித்த தொடர் விசாரணையில் உண்மைத் தன்மை வெளியாகி விடும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொருட்கள், வாகனங்கள், ஆவணங்கள் திருடப்பட்டால் அல்லதுதவறவிட்டால் மற்றும் தொலைந்து போனால் அந்தந்த எல்லைக்கு உட்பட்ட குற்றப்பிரிவு போலீஸார்முதல்கட்டமாக புகார் மனுவைப்பெற்று விசாரணை மேற்கொள்வார்கள். அவர்களுக்கு 19 வழிகாட்டுதல்களை காவல் ஆணையர் வழங்கி யுள்ளார்.
அதன்படி, காணாமல் போன ஆவணங்கள் தொடர்பாக காவல்நிலைய போலீஸாரின் விசாரணைநடைபெறும். அதைத் தொடர்ந்துகுற்ற ஆவணக் காப்பக போலீஸார்தடையில்லா சான்று வழங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.