வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கீவ்: உக்ரைனைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் போரினால் இறந்துவிட்டால் தனது குழந்தை ஆதரவில்லாமல் போய்விடக் கூடாது என்பதற்காக அதன் முதுகில் பெயரையும், யாராவது தத்தெடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் எழுதிய புகைப்படம் இணையத்தில் பரவி இதயத்தை கனக்க செய்துள்ளது.
ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. இப்போரில் இரு தரப்பும் மாறி மாறி குற்றம்சாட்டிக் கொள்கின்றன. ஐ.நா., மனித உரிமைகள் ஆணைய தகவல் படி இதுவரை 1417 பொது மக்கள் இப்போரில் கொல்லப்பட்டு உள்ளார்கள். அவர்களில் 121 பேர் குழந்தைகள். இது தவிர நூற்றுக்கணக்கான ரஷ்ய மற்றும் உக்ரேனிய வீரர்கள் இறந்துள்ளனர். சமீபத்தில் ரஷ்ய படைகள் தாங்கள் தப்பிப்பதற்கு குழந்தைகளை கேடயமாக பயன்படுத்துவதாக இங்கிலாந்து பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
கீவ் நகருக்கு அருகே புச்சா பகுதியில் நூற்றுக்கணக்கான உடல்கள் கண்டெடுக்கப்பட்ட தாகவும். பல உடல்கள் கைகள் கட்டப்பட்டு, தலையில் குண்டு துளைக்கப்பட்ட நிலையில் இருப்பதாக உக்ரைன் கூறியது. இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் புடினை போர் குற்றவாளி என அறிவித்தார். இக்குற்றச்சாட்டுகளை ரஷ்யா மறுத்துள்ளது. பொது மக்களை தாங்கள் கொல்லவில்லை. தங்கள் நாட்டை களங்கப்படுத்த உக்ரைன் அரங்கேற்றியுள்ள நாடகம் இது என கூறியுள்ளது.
இந்நிலையில் உக்ரைனைச் சேர்ந்த குழந்தையின் புகைப்படம் சமூக ஊடகங்களில் அதிகம் பேரால் பகிரப்பட்டு கவனம் ஈர்த்துள்ளது. வெரா என்ற அந்த குழந்தையின் பெயரை அதன் முதுகில் எழுதியுள்ள தாய், “ஏதாவது நடந்துவிட்டால் யாரேனும் இவளை தத்தெடுத்து வளருங்கள்.” என கூறியுள்ளார். மற்றொரு புகைப்படத்தில் தங்கள் குடும்பம் பாதுகாப்பாக இருப்பதாகவும், ஆனால் அதே விவரம் எழுதப்பட்ட காகிதத்தை இன்னமும் தூக்கி எறிய முடியவில்லை என போர் முடிவுக்கு வராதததை குறிப்பிட்டுள்ளார்.
Advertisement