விழுப்புரம்: இந்த ஆட்சியில் நிம்மதியாக இருக்கிறோம் என்று மக்கள் கூறினார்கள் என விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற நலதிட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார். பெரியார் கண்ட கனவுப்படி தமிழகம் எங்கும் சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கொமுவாரி பகுதியில் ரூ.2கோடியே 88 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 100 பெரியார் நினைவு சமத்துவ புர வீடுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் நேரில் சென்று திறந்து வைத்தார். அதன்பிறகு ஒழுந்தியாம்பட்டு பகுதிக்கு சென்று 10,722 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.24.77 கோடி மதிப்பில் முடிவுற்ற 38 திட்டப்பணிகளை திறந்து வைத்தும் பல்வேறு திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டி சிறப்புரை ஆற்றினார்.
அப்போது, தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற 10 மாத காலத்தில் இந்த அரசு மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை செய்து வருகிறது. இன்று உங்களை நேரில் சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கி இருக்கிறேன். இங்கு தாய்மார்களிடம் சில கேள்விகள் கேட்டேன். இப்போது நடைபெற்று கொண்டிருக்கிற இந்த 10 மாத கால தி.மு.க. ஆட்சி எப்படி இருக்கிறது என்று கேட்டேன். அதற்கு அவர்கள் இந்த ஆட்சி ரொம்ப சிறப்பாக இருக்கிறது என்று சொன்னார்கள்.
திமுக ஆட்சியில் நிம்மதியாக உள்ளதாக மக்கள் பாராட்டி வருகின்றனர் என கூறிய முதல்வர், ஏதாவது குறைகள் இருக்கிறதா? என்று கேட்டேன். அதற்கு, அவர்கள் எந்த குறையும் இல்லை. நிம்மதியாக இருக்கிறோம் என்று கூறினார்கள். இது தொடரும். தொடர வேண்டும். அப்படி தொடர வேண்டும் என்பதற்காக உறுதி எடுத்துக் கொள்ளக் கூடிய, நிறைவேற்றக் கூடிய நிலையில்தான் இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.
தந்தை பெரியார் இல்லையென்றால் நாமெல்லோரும் இல்லை, தமிழகத்தின் முன்னேற்றமும் இல்லை என பேசினார். பெரியார், அண்ணா, கருணாநிதியால் தமிழருக்கு எதிரான சூழ்ச்சிகள் எடுபடாமல் போனது. பெரியார் கண்ட கனவுப்படி தமிழகம் எங்கும் சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்தார். அனைத்து சமூகத்தினரும் வசிக்க கூடிய முதல் சமத்துவபுரம் தமிழகத்தில் 1997-ல் தொடங்கப் பட்டது என கூறினார். தமிழகத்தில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சிக்கான ஒரு உதாரணமே சமத்துவபுரங்கள் ஆகும் என பேசினார்.
கொழுவாரி சமத்துவபுர திட்டத்திற்கு 2010ஆம் ஆண்டிலேயே நிதி ஒதுக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்தால் திட்டம் கைவிடப்பட்டது. தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடங்கிய திட்டத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி என கூறினார். உள்ளாட்சித்துறை மக்களுக்கு மிகவும் நெருக்கமாக, மக்களோடு மக்களாக இருக்கும் துறை, ஆகவே மக்களுக்கான திட்டங்களை உடனடியாக செய்து கொடுக்கும் துறையாக உள்ளாட்சித் துறை இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
நான் உள்ளாட்சி துறை அமைச்சராக சிறப்பாக பணியாற்றியபோது கலைஞர் என்னை பாராட்டினார். மக்களோடு மக்களாக நெருக்கமாக இருக்கக்கூடிய துறை உள்ளாட்சி துறை. இந்த துறை அப்போது எப்படி வேகமாக செயல்பட்டதோ அதேபோல் இப்போது முடுக்கி விடப்பட்டுள்ளது. இதேபோல் ஒவ்வொரு துறையும் வேகமாக செயல்படுகிறது. அதனால் தான் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி சிறப்பாக இருப்பதாக மக்கள் மகிழ்ச்சியும், பாராட்டும் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.