இன்னும் இவ்ளோ இருக்கா! ஆளுநரின் முடிவுக்காக காத்திருக்கும் மசோதாக்கள் – முழு விபரங்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு கோரும் மசோதா உள்பட பல மசோதாக்கள், ஆளுநர் முன்பு நிலுவையில் காத்திருப்பது தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி சட்டமன்றத்தில் 2-வது முறையாக மசோதா நிறைவேற்றப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த மசோதாவை ஆளுநர், இதுவரை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் நிலுவையில் வைத்துள்ளார்.
கூட்டுறவு சங்கத் தலைவர் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைப்பது தொடர்பான இரண்டாவது சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு கடந்த ஜனவரி 12-ம் தேதி ஆளுநர் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கும் ஆளுநர் அனுமதி தரவில்லை. பாரதியார் பல்கலைக்கழக திருத்த மசோதா மீதும் ஆளுநர் ஆர்.என். ரவி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவது தெரிய வந்துள்ளது.
image
தமிழக மீன் வள பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்துக்கு துணை வேந்தர்களை, தமிழக அரசே நியமிப்பது தொடர்பான மசோதாக்கள், மாநில சட்ட ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று, சில சட்டங்களை வாபஸ் பெறுவது தொடர்பான மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரியில் ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. எனினும் இந்த மூன்று மசோதாக்களும் சுமார் 27 மாதங்களாக நிலுவையில் உள்ளது.
டி.என்.பி.எஸ்.சி போட்டி தேர்வுகளில் பொதுத் தமிழை ஒரு பாடமாக சேர்ப்பதற்கான மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, 2020-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி அனுப்பிவைக்கப்பட்ட போதும் அதன்மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தெரியவந்துள்ளது. கூட்டுறவு சங்கத்தில் இயக்குநர் குழுவை சஸ்பெண்ட் செய்யும்பட்சத்தில், உடனடியாக நிர்வாக அதிகாரியை பதிவாளர் நியமிக்கும் அதிகாரம் வழங்குவதற்கான 3-வது திருத்த மசோதா கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தார். இதனால் அதனை, திரும்பபெறுவதற்கான கடிதம் கடந்த நவம்பரில் தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ளது.
image
அண்ணா பல்கலைக்கழகத்தை, அண்ணா தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகமாக பெயர் மாற்றம் செய்வதற்கான மசோதா, மற்றும் அண்ணா பல்கலைக்கழக திருத்தச் சட்டம் 2020 ஆகியவை கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஓராண்டுக்கும் மேலாக ஆளுநர் நிலுவையில் வைத்திருந்த இந்த மசோதாக்களை திரும்பபெறுவதற்கான கடிதத்தை கடந்த நவம்பரில் தமிழக அரசு அனுப்பியது.
சென்னை பல்கலைக்கழக துணை வேந்தரை நியமிக்கும் தேர்வு கமிட்டி தொடர்பான தமிழக அரசின் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் முன்பு நிலுவையில் இருந்தது. இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு மசோதாவை திரும்பபெற தமிழக அரசு சார்பில் கோப்புகளை அனுப்பியதும் தெரியவந்துள்ளது.
ஆளுநரின் முடிவுக்காக காத்திருக்கும் மசோதாக்கள்:
1. 08.02.22 நீட் விலக்கு மசோதாவை 2ஆவது முறையாக ஆளுநருக்கு அனுப்பிய மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் நிலுவை
2. 12.01.22: கூட்டுறவு சங்கத் தலைவர் பதவிக்காலத்தை 5ல் இருந்து 3 ஆண்டுகளாக குறைப்பது தொடர்பான 2வது சட்ட திருத்த மசோதா
3. 20.09.21: பாரதியார் பல்கலை. திருத்த மசோதா மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தும் ஆளுநர் ஆர்.என். ரவி
4. 13.01.20 தமிழக மீன் வள பல்கலை.க்கு துணை வேந்தரை தமிழக அரசே நியமிப்பது தொடர்பான மசோதா நிலுவை
5. 18.01.20 தமிழ்நாடு கால்நடை பல்கலை.க்கு துணை வேந்தரை தமிழக அரசே நியமிப்பது தொடர்பான மசோதா நிலுவை
6. 13.01.20 சில சட்டங்களை திரும்ப பெறுவது தொடர்பான மசோதா சுமார் 27 மாதங்களாக நிலுவை
7. டி.என்.பி.எஸ்.சி போட்டி தேர்வுகளில் பொதுத் தமிழை ஒரு பாடமாக சேர்ப்பதற்கான மசோதா 2020 ஏப்ரல் முதல் நிலுவை
மசோதாக்களை திரும்பபெற கடிதம் அனுப்பப்பட்டவை
8. கூட்டுறவு சங்கத்தில் இயக்குநர் குழுவை சஸ்பெண்ட் செய்தால், நிர்வாக அதிகாரியை நியமிக்க அதிகாரம் வழங்கும் 3-வது திருத்த மசோதா
9. அண்ணா பல்கலைக்கழகத்தை அண்ணா தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகமாக பெயர் மாற்றம் செய்வதற்கான மசோதா
10. அண்ணா பல்கலைக்கழக திருத்தச் சட்டம் 2020 கடந்த 2020 செப்டம்பரில் அனுப்பப்பட்டது
11. சென்னை பல்கலைக்கழக துணை வேந்தரை நியமிக்கும் தேர்வு கம்மிட்டி தொடர்பான மசோதா
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.