"இப்படியா செய்வது.. இது தேச விரோதம்".. நிர்மலா சீதாராமன் மீது பாயும் சு. சாமி

பட்ஜெட் பற்றாக்குறையை சரி செய்ய பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்துவது நிர்வாகத் திறமையின்மையின் அடையாளம். இதுவும் கூட தேச விரோதம்தான் என்று
சுப்பிரமணியம் சாமி
கூறியுள்ளார்.

பெட்ரோலியப் பொருட்களின் விலை ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் சமயத்தில் உயர்த்தப்படாமல் இருந்தது. தேர்தல் முடிந்த பிறகும் கூட விலை உயரவில்லை. இது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. கூடவே சமையல் எரிவாயு விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

பெட்ரோலும், டீசலும் கிட்டத்தட்ட சம விலைக்கு வந்து விட்டன. பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வால் பல்வேறு விலை உயர்வையும் மக்கள் காண முடிகிறது. சரக்கு வாகன வாடகைக் கட்டணம் உயர ஆரம்பித்துள்ளது. சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்து பஸ் கட்டண உயர்வையும் மக்கள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

இலங்கையில் என்ன விலைக்கு அத்தியாவசியப் பொருட்கள் விற்கின்றனவோ கிட்டத்தட்ட அந்த நிலையை நோக்கி இந்தியாவும் போய் விடும் போல என்று நிபுணர்கள் அச்சப்படுகின்றனர். இந்த நிலையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுக்கு பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணியம் சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ட்வீட்டில், தினசரி பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விலையை உயர்த்துவது மக்கள் புரட்சிக்கு வித்திடும். நிதியமைச்சகத்தின் அறிவு வறட்சியே இதற்குக் காரணம். அதனால்தான் இப்படி தவறான வழியில் போய்க் கொண்டுள்ளனர். இதுவும் கூட தேச விரோதம்தான்.

பட்ஜெட் பற்றாக்குறையை சரி செய்ய இதுபோல பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்துவது என்பது நிர்வாத் திறமையின்மையின் அடையாளம் என்று சுப்பிரமணியம் சாமி சாடியுள்ளார். கிட்டத்தட்ட பல்வேறு பொருளாதார நிபுணர்களும் கூட சாமி சொல்வது போலவே சொல்கின்றனர். பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயரும் வாய்ப்புள்ளது. இதுபோல நடந்தால் மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாக நேரிடும் என்பது அவர்களின் கருத்தாகும்.

இதற்கிடையே, சில மாநிலங்கள் தந்து வரும் இலவசப் பொருட்களை மத்திய அரசு குறி வைக்கப் போவதாக பேச்சு கிளம்பியுள்ளது. இதுபோன்ற இலவசத் திட்டங்களால் இலங்கை போன்ற நிலை ஏற்படலாம் என்று அரசு உயர் அதிகாரிகள் பிரதமருக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது இலவசப் பொருட்களை தடை செய்யும் நிலைக்கு மத்திய அரசை கொண்டு செல்லுமா என்ற அச்சமும் எழுந்துள்ளது.

கடந்த 5 மாநிலத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு இலவச சலுகைகளை வாக்குறுதிகளாக அளித்தது ஆம் ஆத்மி கட்சி. தற்போது அக்கட்சி அங்கு ஆட்சியமைத்துள்ளது. அதேபோல உத்ததரப் பிரதேசத்திலும் பல்வேறு இலவச அறிவிப்புகளை பாஜக அறிவித்தது. இதேபோல பல்வேறு மாநிலங்களிலும் இலவச சலுகைகள் அதிக அளவில் உள்ளன. இதற்கெல்லாம் ஆப்பு வருமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

அடுத்த செய்திஸ்டார் ஹோட்டலில் போதை விருந்து… சிக்கும் அரசியல், சினிமா பிரபலங்களின் வாரிசுகள்?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.