புதுடெல்லி: இலங்கையின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது, இந்தியா அந்தப் பாதையில் செல்கிறது, எனவே அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என பிரதமர் மோடியை சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் வலியுறுத்தியுள்ளார்.
கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது.
இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் 12 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. பொருட்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
இதனை சுட்டிக்காட்டி மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று அறிக்கை வெளியிட்டு இருந்தார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி மத்திய அரசு விவாதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி இருந்தார்.
இந்தநிலையில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியதாவது:
இலங்கையின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இந்தியா அந்தப் பாதையில் செல்கிறது. நமது பொருளாதாரத்தை நாம் சரியாக கையாள வேண்டும் இல்லையேல் நமது நிலை இலங்கையை விட மோசமாகிவிடும். அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுக்க வேண்டும் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மேற்கு வங்க முதல்வரின் கருத்தை நானும் எதிரொலிக்கிறேன். இந்தியாவின் பொருளாதார நிலையும் மிகவும் மோசமாக உள்ளது. இலங்கையில் மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதுபோன்ற சூழல் இங்கும் ஏற்பட்டு விடக்கூடாது. ஜனநாயகத்தை வலுக்கட்டாயமாக கட்டுப்படுத்த முயற்சிப்பதற்கு பதிலாக, மத்திய அமைப்புகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக நெருக்கடியைச் சமாளிக்க எப்படி தீர்வு காண வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். இதற்கு மத்திய அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.