இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கடும் மருந்து தட்டுப்பாடு காரணமாக சுகாதார அவசர நிலையை அரசு பிரகடனப்படுத்தி உள்ளது. தலைநகர் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் அரசுக்கு எதிராக தமிழர்களும், சிங்களர்களும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
கொரோனாவால் சுற்றுலாத்துறை முடக்கம், அந்நியச் செலாவணி வீழ்ச்சி, பண வீக்கம், அத்தியாவசிய பொருட்கள் இமாலய விலையேற்றம், உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு, மின் தடை, கடும் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் இலங்கை கடும் நிதி பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கிறது.
அதிபர் கோத்தபயவுக்கு எதிராக போர்க் கொடி தூக்கியதால் போராட்டத்தை கட்டுப்படுத்த நாடு தழுவிய அவசர நிலையை கடந்த வெள்ளிக்கிழமை அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்தார்.
36 மணிநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் உத்தரவை மீறி பொது மக்கள் கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்காவில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் வீட்டின் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிபர், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் திரண்ட தமிழ் மற்றும் சிங்கள மக்கள் அரசுக்கு எதிராக ஆவேச கோஷங்களை எழுப்பி தர்ணாவில் ஈடுபட்டனர். போராட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் பொது மக்களை போலீசார் விரட்டியடித்தனர். கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அணி திரளென போலீசார், ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்சே தவிர்த்து மற்ற அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர். இந்நிலையில், நிதி, கல்வி உள்ளிட்ட துறைகளுக்கு 4 பேர் இடைக்கால அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.பரபரப்பான சூழலுக்கு மத்தியில் இன்று காலை இலங்கை நாடாளுமன்றம் கூடுகிறது.
நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அரசு மருத்துவ அதிகாரிகள் தலைமையிலான அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை அடுத்து பேசிய செயலாளர் ஷெனல் பெர்னாண்டோ கடும் மருந்து தட்டுப்பாடு காரணமாக நாட்டில் சுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.