விழுப்புரத்தில் சமத்துவபுரத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் அங்கு வாலிபால் விளையாடினார்.
விழுப்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். விழுப்புரம் மாவட்டம் கொழுவாரி ஊராட்சியில் ரூ.2 கோடியே 68 லட்சம் மதிப்பில் 100 வீடுகள் கட்டப்பட்டுள்ளது.
இதற்காக நேற்று முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து விழுப்புரம் சென்றார். இன்று காலை 9 மணிக்கு அங்கு இருக்கும் சமத்துவபுரத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளரான அமுதா ஐஏஎஸ் கலந்து கொண்டார். இவர் மத்திய பணிகளில் இருந்து கடந்த வருடம்தான் தமிழ்நாடு பணிகளுக்கு திரும்பினார். முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்பட்டவர் அமுதா ஐஏஎஸ். கருணாநிதி மறைவின் போது இறுதிச்சடங்கு நிகழ்வில் முன்னின்று பணிகளை கவனித்துக்கொண்டார் அமுதா ஐஏஎஸ்.
இந்த நிலையில் இன்று விழுப்புரத்தில் திறக்கப்பட்ட சமத்துவ புரத்தில் முதல்வர் ஸ்டாலினை அமுதா ஐஏஎஸ் சந்தித்தார். அவரிடம் சமத்துவபுரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் விசாரித்தார். அதோடு எப்படி இருக்கீங்க என்று கேட்டு அன்பாக விசாரித்தார். பின்னர் சமத்துவபுரம் குறித்தும், அதில் செய்யப்பட்ட வசதிகள் பற்றியும் முதல்வர் ஸ்டாலினிடம் அமுதா ஐஏஎஸ் விளக்கி பேசினார்.
இதையும் படியுங்கள்: தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள்
அமைச்சர்கள் மா சுப்பிரமணியம், மஸ்தான் ஆகியோர் இந்த சந்திப்பில் உடன் இருந்தனர். இதையடுத்து சமத்துவபுரத்தில் உள்ளே இருக்கும் மைதானத்திற்கு முதல்வர் ஸ்டாலின் சென்றார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த வாலிபால் மைதானத்தில் இளைஞர்கள் விளையாடிக்கொண்டு இருந்தனர். சட்டென முதல்வர் ஸ்டாலின் உள்ளே சென்று அவர்களுடன் விளையாட தொடங்கினார்.
அப்போது அங்கே நின்று முதல்வர் வாலிபால் ஆடினார். முதல் பந்தை முதல்வர் ஸ்டாலின் சர்வ் செய்ய ஆட்டம் தொடங்கியது. அதன்பின் இளைஞர்களிடம் மாறி மாறி பால் சென்றது. பின்னர் முதல்வர் ஸ்டாலினும் தன்னிடம் வந்த பந்தை அடித்தார்.
கடைசியில் முதல்வர் ஆடிய அணிதான் ஒரு புள்ளியை பெற்று முன்னிலை பெற்றது. இந்த விளையாட்டு திடலுக்கு கலைஞர் விளையாட்டுத்திடல் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முதல்வர் ஸ்டாலின் வாலிபால் ஆடிய வீடியோ இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil