உக்ரைனின் புச்சா நகர படுகொலைகளுக்கு பதிலடியாக, ரஷிய தூதரக அதிகாரிகளை வெளியேற்ற ஜெர்மனி அரசு முடிவு செய்துள்ளது.
தலைநகர் கீவ்- வுக்கு அருகேயுள்ள புச்சா நகரில் இருந்து வெளியேறுவதற்கு முன், ரஷ்ய வீரர்கள் அந்நகரில் வசித்து வந்த சுமார் 400க்கும் மேற்பட்ட பொதுமக்களை படுகொலை செய்து புதைக்குழிகளில் வீசிவிட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. பல இடங்களில் கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
அப்பாவி மக்கள் மீதான இந்த கொடூர தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தங்கள் நாட்டிலிருந்து ரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற்ற ஜெர்மனி முடிவு செய்துள்ளது.
பிரான்ஸும் ரஷ்ய தூதரக அதிகாரிகள் 35 பேரை வெளியேற்ற உள்ளதாக அறிவித்துள்ளது. இதனிடையே, புச்சா நகர் படுகொலை தொடர்பான குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ள ரஷ்ய அதிகாரிகள், உக்ரைன் வீரர்கள் நடத்திய தாக்குதலில் அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.