கீவ்: ரஷ்யப் படைகளால் தாங்கள் கொல்லப்படுவோம் என்ற அச்சத்தில் தங்கள் குழந்தைகளின் உடம்பில் பெயர், போன் நம்பர்களை உக்ரைன் தாய்மார்கள் எழுதி வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனில் ரஷ்யா கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக போர்த் தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யா நடந்தும் போர் காரணமாக, உக்ரைனிலிருந்து 40 லட்சம் பேர் அண்டை நாடுகளுக்கு வெளியேறியுள்ளனர். அவர்களில் 90% பேர் பெண்கள், குழந்தைகள். இதுதவிர 60 லட்சம் பேர் உள்நாட்டிலேயே வாழ்விடத்திலிருந்து வேறு பகுதிகளுக்குச் சென்றுள்ளனர் என ஐ.நா.வுக்கான அகதிகள் ஆணையம் தெரிவித்துள்ளது. உக்ரைன் – ரஷ்ய போரில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், ரஷ்ய ஆதிக்கம் உள்ள இடங்களில் ரஷ்ய வீரர்களால் தாங்கள் கொல்லப்படுவோம் என்ற அச்சத்தில், உக்ரைன் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் உடம்பில் அவர்களது பெயர்களையும், குடும்ப உறவினர்களின் போன் நம்பர்களையும் எழுதியுள்ளனர். ரஷ்ய வீரர்களால் தாங்கள் கொல்லப்பட்டு, குழந்தைகள் பிழைத்தால் அவர்களை குடும்பத்தினருடன் சேர்வதற்கு இது உதவும் என்ற எண்ணத்தில் தாய்மார்கள் இதனை செய்துள்ளதாக உக்ரைன் பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில், உக்ரைன் தலைநகர் கீவ் அருகே இர்பின், புச்சா ஆகிய பகுதிகளில் இருந்து ரஷ்ய படைகள் அண்மையில் வெளியேறின. இதையடுத்து அங்கு உக்ரைன் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் சென்றிருக்கின்றனர். அப்போது உக்ரைன் தெருக்களில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டு உடல்கள் சிதறிக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.