உக்ரைன் மீது படையெடுத்த ரஷ்ய துருப்புகள் பெரும்பாலானோர் இரண்டாம் உலகப் போர் காலத்து துப்பாக்கிகளுடன் களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது. தலைநகர் கீவ்வை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வெளியேறியுள்ள ரஷ்ய துருப்புகள் தற்போது தென்கிழக்கில் குவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ரஷ்ய ஆதரவு டொன்பாஸ் பகுதியில் உள்ள வீரர்கள் வெளியிட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய துருப்புகளில் உள்ள பெரும்பாலான வீரர்கள் இரண்டாம் உலகப் போர் காலத்து துப்பாக்கிகளுடன் களமிறங்கியுள்ளதாகவும்,
போருக்கான பயிற்சி பெரும்பாலானோருக்கு இல்லை எனவும் அம்பலமாகியுள்ளது.
மட்டுமின்றி, உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறையால் ரஷ்ய துருப்புகள் கடும் பின்னடைவை எதிர்கொண்டுள்ளது.
3 நாட்களில் போரை முடித்துக்கொள்ளத் திட்டமிட்டு உக்ரைனுக்குள் புகுந்த ரஷ்ய துருப்புகளுக்கு ஒரு மாதம் கடந்தும் முறையான விநியோகம் எதும் முன்னெடுக்கப்படவில்லை.
இதனால் உணவு மற்றும் குடிநீர் பற்றாக்குறையால், பசிக்கு பல ரஷ்ய வீரர்கள் தேங்கிய நீரை குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மட்டுமின்றி, இதுவரையான போரில் சுமார் 20,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மேலும் 60,000 வீரர்களை உக்ரைனில் களமிறக்க ரஷ்யா தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.